கம்பராமாயணம்

 

 

கம்பராமாயணம்

-    கம்பர்

அயோத்தியா காண்டம்

மந்தரை சூழ்ச்சிப் படலம்

                  இராமன் முடிசூடப்போகும் செய்தியைக் கோசலையிடம்  மங்கையர் அறிவித்தவுடனே  கோசலை சுமித்திரையுடன் மகிழ்ந்து   திருமால் கோயில் சென்று வழிபட்டுக் கோதானம் செய்தல், தயரதன் முடிசூட்டு விழாவிற்குரிய நல்ல நாள் நாளையே என்பதனை அறிந்து,  வசிட்டனை வரவழைத்து  இராமனுக்கு அறிவுரை வழங்கும்படி கூறுதல், வசிட்டன் இராமன் மனை புகுந்து அவனுக்கு அறிவுரை கூறுதலும், இராமன் வசிட்டனுடன் திருமால் கோயிலை அடைதல்,  இராமனுக்குத் தீர்த்த நீராட்டிச் சடங்குகள் செய்தல்,நகர மக்களின் மகிழ்ச்சி,  நகர மக்கள் நகரினை அழகு செய்தல், அது கண்ட மந்தரை சீற்றம் கொள்ளல்,  இராமன் மேல் கொண்ட கோபத்தால் கைகேயியின் அரண்மனை அடைந்து உறங்கும்     கைகேயியை அவள் எழுப்புதல், கைகேயியிடம் இராம  பட்டாபிஷேகச் செய்தியை மந்தரை கூறுதல், அதுகேட்டு அவள் மகிழ்ந்து மாலை அளித்தல், கைகேயி அளித்த பொன்மாலையை அறுத்து  வீசி மந்தரை பல மாற்றத்தால் கைகேயியை மனமாற்றம்  செய்தல், மனம் மாறிய கைகேயி மந்தரையைப் பாராட்டி ஆலோசனை கேட்டல், மந்தரை உபாயம் கூறுதல், உபாயம் உரைத்த மந்தரையைப் பாராட்டி மகிழ்ந்து  பெரும்பரிசுகள் அளித்துக் கைகேயி அவ்வாறே செய்வேன் என உறுதியளித்தல் ஆகிய செய்திகள் இப்பகுதியில் கூறப்பெறுகின்றன.

 

 

மந்தரை சூழ்ச்சிப் படலம்

 

சோதிடர்களை முடிபுனைய நல்லநாள் கூறுமாறு தசரதன் வினாவுதல்.

கடிகமழ் தாரினான் கணித மாக்களை

முடிவுற நோக்கியோர் முகமன் கூறிப்பின்

வடிமழு வாளவற் கடந்த மைந்தற்கு

முடிபுனை முதன்மைநாண் மொழிமி னென்றனன்.                  1

 

 

நாளை நல்லநாளென்று கணிதமாக்கள் கூறவே, தசரதன் வசிட்டனை வரவழைத்தல்

'பொருந்துநாள்நாளை, நின்புதல்வற்கு' என்றனர்,

திருந்தினார்; அன்னசொல்கேட்டசெய்கழல்

பெருந்திண்மால்யானையான், 'பிழைப்புஇல்செய்தவம்

வருந்தினான்வருக' என, வசிட்டன்எய்தினான்.                                   2

            நூல்களில் தேறியவர்களாகிய கணித நூல் அறிஞர்கள் ‘உன் மகனுக்கு, முடி சூட்டுவதற்குப் பொருத்தமான நல்ல நாள் நாளைக்கேயாகும்’ என்று சொன்னார்கள். அந்த வார்த்தையைக் கேட்ட புனைந்த வீரக்கழலணிந்த பெரிய வலிய மதமயக்கம் உடைய யானையை உடைய தயரதன், தவறில்லாத தவத்தைச் செய்து வருத்திய மேனி உடைய வசிட்டனை வருக’ என்று அழைக்க வசிட்ட முனிவன் வந்து சேர்ந்தான்.

நாளைக்குப் பட்டாபிஷேகமாதலால் இன்று செய்விக்க வேண்டிய சடங்குகளை இராமனுக்குச் செய்வித்து உறுதிமொழிகளை உபதேசியும் என்று தசரதன் சொல்லுதல்

'நல்லியல்மங்கலநாளும்நாளை; அவ்

வில்லியல்தோள்அவற்குஈண்டுவேண்டுவ

ஒல்லையின்இயற்றி, நல்உறுதிவாய்மையும்

சொல்லுதிபெரிது' எனத்தொழுதுசொல்லினான்.                                 3

            தயரதன் வசிட்டனைப் பார்த்து ”நல்ல இயல்புகளையுடைய கோள் நிலை உடைய முகூர்த்த நாளும் நாளைக்கேயாகும். ஆதலால், அந்த வில் பழகிய தோள் உடையவனாகிய இராமனுக்கு  இவ்விடத்தில்   வேண்டிய சடங்குகளைச் செய்து,  நல்ல அரசியல் அறமாகிய  உண்மைகளை மிகவும் சொல்வாயாக“ என்று தொழுது வணங்கிச் சொன்னான்

 

இராமபிரானது மாளிகைக்கு வசிட்டன் செல்ல, இராமன் முனிவனை யெதிர்கொண்டு தன்னிருக்கைசேர்தல்

முனிவனும், உவகையும்தானும்முந்துவான்,

மனுகுலநாயகன்வாயில்முன்னினான்;

அனையவன்வரவுகேட்டு, அலங்கல்வீரனும்,

இனிதுஎதிர்கொண்டு, தன்இருக்கைஎய்தினான்.                                  4

வசிட்டனும் தன் மகிழ்ச்சியைவிடவும் முந்திச் செல்வானாய் மனுவின் வமிசத்தில் தோன்றிய இராமனது அரண்மனை வாயிலை அடைந்தான். அந்த வசிட்டனது வருகையைக் கேள்வியுற்று மாலையணிந்த இராமனும் இனிமையாக வரவேற்று, தன் இருக்கை எய்தினான்.

 

நாளைக்கு உனக்குப் பட்டாபிஷேகமென்று வசிட்டன் தெரிவித்தல்

ஒல்கல்இல்தவத்துஉத்தமன், ஓதுநூல்

மல்குகேள்வியவள்ளலைநோக்கினான்;

'புல்குகாதல்புரவலன், போர்வலாய்!

நல்கும்நானிலம்நாளைநினக்கு' என்றான்.                              5

                     தளர்ச்சி இல்லாத தவத்திற் சிறந்த புண்ணியனாகிய வசிட்டன், ’கற்றற்குரிய நூல்களையும்  நிரம்பிய கேள்வி அறிவினையும்  உடைய இராமனை நோக்கி,  போரில் வல்லவனே! மிகுந்த பாசத்தை உடைய மன்னன் தயரதன் உனக்கு, அரசாட்சியை நாளை நல்குவான்’ என்று கூறினான்.

 

இராமனை நோக்கி, வசிட்டன் உறுதிப் பொருளைக் கூறுவேன் எனல்.

என்று, பின்னும்இராமனை, நோக்கி, "நான்

ஒன்றுகூறுவதுண்டு, உறுதிப்பொருள்;

நன்றுகேட்டுக்கடைப்பிடிநன்கு' என

துன்றுதார்அவற்குசொல்லுதல்மேயினான்.                             6

என்று சொல்லி மேலும் இராமனைப் பார்த்து  ‘நான் கூறுவது உறுதிப்பொருள் ஒன்று உண்டு  அதைக் கவனித்துக்கேட்டு நன்கு கடைப்பிடி என்று  நெருங்கிய மாலை அணிந்த இராமனுக்கு
சொல்லத் தொடங்கினான்;

 

இராமபிரானுக்கு வசிட்டன் கூறிய உறுதிமொழிகளைத் தெரிவிப்பன   (அந்தணரிடம் நடந்துகொள்ளவேண்டிய  முறைகள்)

'கரியமாலினும், கண்ணுதலானினும்,

உரியதாமரைமேல்உறைவானினும்,

விரியும்பூதம்ஒர்ஐந்தினும், மெய்யினும்,

பெரியர்அந்தணர்; பேணுதிஉள்ளத்தால்.                                            7

                   வேதம் வல்ல வேதியர் கருநிற உருவினனாய திருமாலைக் காட்டிலும் நெற்றிக்
கண்ணுடைய சிவபெருமானைக் காட்டிலும் தனக்கே உரிய திருவுந்தித் தாமரை மேல் வீற்றிருந்தருளும் பிரமனைக் காட்டிலும் பரந்து  விளங்கும் ஒப்பற்ற பஞ்ச பூதங்களைக் காட்டிலும் சத்தியத்தைக் காட்டிலும் மேம்பட்டவர் ஆவர் (அவர்களை)  மனப்பூர்வமாக புறந்தருவாயாக.

 

'அந்தணாளர்முனியவும், ஆங்குஅவர்

சிந்தையால்அருள்செய்யவும், தேவருள்

நொந்துஉளாரையும், நொய்துஉயர்ந்தாரையும்,

மைந்த! எண்ண, வரம்பும்உண்டாம்கொலோ?                       8

            மகனே!வேதியர்கள் வெகுளவும் அவ்வேதியர் மனத்தோடு பொருந்தி
கருணை புரியவும் தேவர்களுள் வருத்தம் அடைந்தவர்களையும் எளிதாக மேம்பட்டவர்களையும் கணக்கிட அளவும் இருக்கின்றதோ?’ (இல்லை என்றபடி)

'அனையர்ஆதலின், ஐய! இவ்வெய்யதீ-

வினையின்நீங்கியமேலவர்தாளிணை

புனையும்சென்னியைஆய்ப்புகழ்ந்துஏத்துதி;

இனியகூறிநின்றுஏயினசெய்தியால்.                          9

 இராமனே(அந்தணர்)அத்தன்மையர் ஆகையால் கொடிய தீவினையிலிருந்து விலகிய இந்த அந்தணரின் திருவடி இணைகளை  முடிமேல் சூடிக்கொண்டு  புகழ்ந்து துதித்து இன்மொழிகளைக் கூறி, அவர்களை உபசரித்து அவர்கள் ஏவிய பணிகளை இருந்து செய்வாயாக.

'ஆவதற்கும், அழிவதற்கும், அவர்

ஏவ, நிற்கும்விதியும்என்றால், இனி

ஆவதுஎப்பொருள், இம்மையும்அம்மையும்

தேவரைப்பரவும்துணைசீர்த்தே?                              10

           அந்தணர் ஆணையிட(ஒருவர்) மேம்படுவதற்கும் அழிந்து போவதற்கும்
விதியும் துணையாக  நின்று உதவும். இவ்வுலகத்தும் அவ்வுலகத்தும் பூசுரராகிய அந்தணரைத் துதிக்கின்ற அளவு சிறப்புடையது; பொருந்திய  எந்தப்பொருள்?’ (எதுவும் இல்லை.)

'உருளும்நேமியும், ஒண்கவர்எஃகமும்,

மருள்இல்வாணியும், வல்லவர்மூவர்க்கும்;

தெருளும்நல்அறமும், மனச்செம்மையும்,

அருளும்நீத்தபின்ஆவதுஉண்டாகுமோ?                                11

 

                       (வட்டவடிவாய் இருத்தலின்) உருண்டு  செல்லும் சக்கரத்தையும் ஒள்ளியமுக்கிளையாய் உள்ள வேலாகிய சூலவேலையும் மயக்கமற்ற சொல் மகளையும் உடைமையாகக் கொண்டுவல்லமை பெற்றவராய  முக்கடவுளர்களுக்கும் தெளிந்த நல்ல தருமமும் கோடுதல் இல்லாத நேரியமனமும்
 இரக்கமாய கருணையும் விட்ட பிறகு நன்மை - உளதாகுமோ?’  (ஆகாது என்றபடி).

'சூதுமுந்துறச்சொல்லியமாத்துயர்,

நீதிமைந்த! நினைக்கிலை; ஆயினும்,

ஏதம்என்பனயாவையும்எய்துதற்கு

ஓதும்மூலம்அவையெனஓர்தியே?                            12

 நேர்மையை இயல்பாக உடைய மகனே!;  சூது
சூதுமுற்பட சொல்லப்பட்ட பெருங்கேட்டினை விளைக்கும்செயல்கள்   உன்னிடத்தில்

இல்லை   ஆனாலும் அவைகள் குற்றம் என்று  சொல்லப்பட்ட அனைத்தையும்; எய்துதற்கு
ஒருவன் அடைவதற்கு சொல்லப் பெறும் மூல காரணம்
என்று ஆய்ந்து  அறிவாயாக.’

 

'யாரொடும்பகைகொள்ளலன்என்றபின்,

போர்ஒடுங்கும்; புகழ்ஒடுங்காது; தன்

தார்ஒடுங்குல்செல்லாது; அதுதந்தபின்,

வேரொடும்கெடல்வேண்டல்உண்டாகுமோ?                         13

  யார்ஒருவரோடும் மாறுபாடு கொள்வதிலன் என்றால்
சண்டை இல்லாமற் போகும்புகழ் குன்றாது  நிறையும் அவனுடைய படை
கெடாதுஅவ்வாறுபடைகெடாதுவளருமாயின் (அவனைப் பகைக்கும் பகை)

அடியோடு அழிதலை மடவேண்டிப்
பெருதல் உண்டாகுமோ’ (வேண்டாம் தானே நடக்கும்.)

 

 

'கோளும்ஐம்பொறியும்குறைய, பொருள்

நாளும்கண்டு, நடுக்குறுநோன்மையின்

ஆளும்அவ்அரசேஅரசு; அன்னது,

வாளின்மேல்வருமாதவம், மைந்தனே!                     14

  மகனே தத்தமக் கேற்ற
புலன்களைக் கொள்ளும்  தன்மையில் வல்ல ஐந்து பொறிகளும்  
அடங்கியிருக்க அரசுக்கு வரும் வருவாயை நாள்தோரும் ஆராய்ந்து   பகைவர்

அஞ்சத்தகும் வலிமையோடு கூடி ஆட்சிபுரிகின்ற அந்த அரசாட்சியே  அரசாகும்
அத்தகையஅரசாட்சிவாளின்கூரியமுனைமேல் நின்றுகொண்டு  செய்யும் பெருந்தவம்எனலாகும்.’

 

'உமைக்குநாதற்கும், ஓங்குபுள்ஊர்திக்கும்,

இமைப்புஇல்நாட்டம்ஓர்எட்டுஉடையானுக்கும்,

சமைத்ததோள்வலிதாங்கினர்ஆயினும்,

அமைச்சர்சொல்வழிஆற்றுதல்ஆற்றலே.                    15

     உமாதேவியின் கணவனாகிய சிவபெருமானுக்கும் உயர்ந்த கருடனை
வாகனமாக உடைய திருமாலுக்கும் இமையாத கண்கள் எட்டு உடைய நான்முகனுக்கும் பொருந்திய தோள் ஆற்றலை பெற்றுடையராக (அரசர்)   இருந்தாலும்  
மந்திரியரது ஆலோசனை வழியில் அரசாட்சியைச்செய்தல்   ஆண்மையாகும்.’

 

'என்புதோலுடையார்க்கும்இலார்க்கும், தம்

வன்பகைப்புலன்மாசுஅறமாய்ப்பதுஎன்?

முன்புநின்றுயர்மூன்றுஉலகத்தினும்

அன்பின்அல்லதுஓர்ஆக்கம்உண்டாகுமோ?    16

  எலும்பும் தோலும் உடையார் ஆகி உள்ள முனிவர்களுக்கும் அவை இல்லாது  தேவசரீரம்
பெற்ற தேவர்களுக்கும் தம்முடைய  வலிய பகையாகிய புலன்களை குற்றம் இல்லாமல்அழிப்பது  என்ன பயனைத் தரும் மூன்று  உலகங்களிலும்   தனக்கு மேம்பட்டதும் பிற்பட்டதும் இல்லாமல் சிறந்து  நிற்கிறஅன்பைவிட நல்லதாகிய ஒரு செல்வம் உளதாகுமோ’(இல்லை என்றபடி.)

 

'வையம்மன்னுயிர்ஆகஅம்மன்னுயிர்

உய்யத்தாங்கும்உடலன்னமன்னனுக்கு,

ஐயம்இன்றி, அறங்கடவாது, அருள்

மெய்யில்நின்றபின்வேள்வியும்வேண்டுமோ?            17

உலக மக்கள் நிலைத்த உயிராக, அந்த நிலைத்த உயிர்களை வாழும்படி
சுமக்கின்ற  உடம்பை ஒத்த அரசனுக்கு, மேற்கொண்ட நெறியின் உறுதிபற்றிய சந்தேகம் இல்லாமல்  அறத்தை விட்டு விலகாது அருளிலும்சத்தியத்திலும் நிலைபெற்று  நின்ற பிறகு யாகங்களும் செய்தல் வேண்டுமோ’ (வேண்டாம் என்றபடி.)

'இனியசொல்லினன்; ஈகையன்; எண்ணினன்;

வினையன்; தூயன்; விழுமியன்; வென்றியன்;

நினையும்நீதிநெறிகடவான்எனில்

அனையமன்னற்குஅழிவும்உண்டாங்கொலோ?          18

 ‘(ஓர் அரசன்) (கேட்டார்க்கு) இனிமை
பொருந்தச் சொல்லும் இன்சொல் உடையவன் நல்ல கொடைத்திறம் உள்ளவன் ஆராய்ச்சி உடையவன் முயற்சி உடையவன் தூய்மையானவன் சிறந்தவன் வெற்றி உடையவன் ஆராய்ந்து அறியும் நேர்மையில் சிறிதும் அகலாதவன் என்றால் அப்படிப்பட்ட அரசனுக்கு கேடும் உண்டாகுமோ?’ (உண்டாகாது).

 

'சீலம்அல்லனநீக்கி, செம்பொன்துலைத்

தாலம்அன்னதனிநிலைதாங்கிய

ஞாலமன்னற்கு, நல்லவர்நோக்கிய

காலம்அல்லதுகண்ணும்உண்டாகுமோ?                    19

நல்லொழுக்கத்திற்குப் படாதவைகளை நீக்கி ,சிவந்த பொன்னை நிறுத்துகின்ற தராசினது நடுநாவை ஒத்த  ஒப்பற்ற  நடுவு நிலைமையை உடைய   உலகை ஆளும் அரசனுக்கு அமைச்சர்கள் ஆராய்ந்துரைத்த பொழுது அல்லாமல்  வேறு கண்ணும் உண்டாகுமோ?’ (இல்லை).

"ஓர்வுஇல்நல்வினைஊற்றத்தினார்உரை,

பேர்வுஇல்தொல்விதிபெற்றுளது" என்றரோ,

தீர்வுஇல்அன்புசெலுத்தலில், செவ்வியோர்

ஆர்வம்மன்னவர்க்குஆயுதம்ஆவதே.                        20

  ஆய்வினை உடைய நல்ல
தொழிலின்கண் எப்பொழுதும் முயலும் முயற்சியை உடைய முனிவர்களது
மொழியை மாறுபடுதல் இல்லாத பழையவிதி அடைந்து (அவ்வுரைவழி)  நடக்கின்றதுஎன்று கருதிஅவர்களிடத்துநீங்காதஅன்பைச் செலுத்துகின்ற காரணத்தால் நன்மையுடைய அப்பெரியோர் தம்பால் செலுத்தும் விருப்பம் அரசனுக்கு படைக்கலம்ஆகும்.’

 

'தூமகேதுபுவிக்கெனத்தோன்றிய

வாமமேகலைமங்கையரால்வரும்

காமம்இல்லைஎனில், கடுங்கேடெனும்

நாமம்இல்லை; நரகமும்இல்லையே.                       21

   இந்த உலகில் உள்ளவர்க்குத் (தீமை விளைக்கத் தோன்றும்) வால் நட்சத்திரம் என்று சொல்லும்படி;
பிறந்துள்ள, அழகிய மேகலாபரணம் அணிந்த பெண்களால் உண்டாகின்ற காம நோய்மட்டும் இல்லையானால் கொடிய கெடுதி என்னும் சொல்லே இல்லையாகும்; நரகத் துன்பமும் இல்லை.’

 

உபதேசித்த பிறகு வசிட்ட முனிவன் ஸ்ரீராமனோடு ஸ்ரீமந்நாராயணனது கோயிலுக்குச் செல்லுதல்

ஏனை நீதி இனையவும் வையகப்

போன கற்கு விளம்பி, புலன்கொளீஇ

ஆன வன்னொடும் ஆயிரம் மௌலியான்

தானம் நண்ணினன், தத்துவம் நண்ணினான். 22

மெய்ப்பொருள் உணர்வில் நெருங்கியவனாகிய வசிட்டன் உலகத்தை உண்டு வயிற்றகத் தடக்கித் காக்கும் திருமாலின் அம்சமான இராமனுக்கு இப்படிப்பட்ட ஏனைய நீதிகளையும் சொல்லி அறிவு கற்பித்து அவனுடனே ஆயிர மணிமுடிகளை உடைய திருமாலினது திருக்கோயிலைச் சென்றடைந்தான்.

வசிட்டன் இராமனுக்குப் பட்டாபிஷேகத்தின் முன்னாட் செய்ய வேண்டிய சடங்கு செய்வித்தல்

நண்ணி, நாகணை வள்ளலை நான்மறைப்

புண்ணி யப்புயல் ஆட்டிப், புலமையோர்

எண்ணும் நல்வினை முற்றுவித்து, ஏற்றினான்,

வெண் நிறத்த தருப்பை விரித்து அரோ.                                 23

அரவணையில் அறிதுயில் அமர்ந்த அண்ணலைச் சென்றடைந்து (வழிபட்டு அவனக்கு முன் இராமனைநால் வேத முறைப்படி அமைந்த நன்மையுடைய தீர்த்தங்களால் நீராட்டி அறிவுடையோர் எண்ணுகின்ற  நல்ல சடங்குகளை முடியச்செய்து  வெண்மையான   தருப்பைப் புல்லைப் பரப்பி  அதன்மேல் எழுந்தருளச் செய்தான்.

தான் உபதேசித்து முன்னாட் சடங்கு செய்வித்ததை முனிவன் அறிவிக்க, பின்பு தசரதன் நகரை யலங்கரிக்க ஏவுதல்

ஏற்றிட, ஆண்தகை இனிது இருந்துழி,

நூல் தட மார்பனும் நொய்தின் எய்தப் போய்,

ஆற்றல்சால், அரசனுக்கு அறிவித்தான்; அவன்

'சாற்றுக, நகர் அணி சமைக்க' என்றனன்.                   24

    (தர்ப்பாசனத்தில்) இருக்கச்செய்ய இராமன் (விரதாதி சடங்குகளைச் செய்து கொண்டு)
இனிமையாக இருந்த பொழுது முப்புரி  நூலைத் தரித்த அகன்ற மார்பினை உடைய வசிட்டன்
விரைவாக அடையச் சென்றுவலிமை மிகுந்த சக்கரவர்த்திக்கு (செய்தியைத் ) தெரிவித்தான்
அம்மன்னவன் நகரத்தை அழகு செய்ய பறையறைவிப்பீராக என்று சொன்னான்.

 

வள்ளுவர், நாளை இராமபட்டாபிடேகமென்று பறையறைந்து தெரிவித்தல்

ஏவினன் வள்ளுவர், 'இராமன், நாளையே

பூமகள் கொழுநனாய், புனையும் மௌலி; இக்

கோ நகர் அணிக!' என, கொட்டும் பேரி அத்

தேவரும் களி கொள, திரிந்து சாற்றினார்.                   25

          (அரசனால்) ஏவப்பட்ட வள்ளுவர்,இராமன் நாளைக்கே  நிலமகள் கணவனாய் மகுடம் சூடுவான்.  (ஆதலால்இந்தத் தலைமை அலங்கரிக்க  என்று சொல்லிமுழுக்குகின்ற   முரசத்தை விண்ணுலகத்துத் தேவரும் மகிழ்ச்சிகொள்ள நகர் எங்கும் சுற்றி அடித்து முழக்கினார்கள்.

நகரத்தவர்க்கு வள்ளுவர்சொல் மகிழ்ச்சியளித்தல்

'கவி அமை கீர்த்தி அக் காளை நாளையே

புவி அமை மணிமுடி புனையும்' என்ற சொல்,

செவி அமை நுகர்ச்சியது எனினும், தேவர்தம்

அவி அமுது ஆனது; அந் நகர் உளார்க்கெலாம்.                       26

   கவிதைகளில் புனையப்படும் புகழை உடைய அந்த இராமன் நாளைக்கே அரசு புரிதற்குரிய அழகிய மகுடத்தை தரிப்பான்;என்ற வள்ளுவர் வார்த்தை காதுகளால் அணுபவிக்கப்படும் ஓசை இனிமையளவினதுதான் ஆனாலும் அயோத்தி நகரில் உள்ளவர்களுக் கெல்லாம் தேவர்களது
அவியுணவையும் அமுதத்தையும்  ஒத்திருந்தது.

 

நகரத்தவரின் பெருங்களிப்புச் செயல்

ஆர்த்தனர்; களித்தனர்; ஆடிப் பாடினர்;

வேர்த்தனர்; தடித்தனர்; சிலிர்த்து மெய்ம் மயிர்

போர்த்தனர்; மன்னனைப் புகழ்ந்து வாழ்த்தினர்;

தூர்த்தனர் நீள் நிதி, சொல்லினார்க்கு எலாம்.              27

(நகர மக்கள்ஆரவாரித்தனர்மகிழ்ந்தனர்ஆடிப் பாடினர்; உடல் வியர்க்கப் பெற்றனர்;   (மகிழ்ச்சியால்) உடல் பெருத்தனர்;  உடம்பில்  மயிர்க் கூச்செறியப் பெற்று மூடப் பெற்றனர்;  தயரதனைத் துதித்து வாழ்த்தினர்;  இந் நற்செய்தியைச் சொன்னவர்களுக்கு  எல்லாம் பெருஞ் செல்வத்தை  நிரப்பினார்கள்.

மாந்தர் நகரினை அலங்கரித்தல்

திணி சுடர் இரவியைத் திருத்துமாறுபோல்,

பணியிடைப் பள்ளியான் பரந்த மார்பிடை

மணியினை வேகடம் வகுக்குமாறு போல்,

அணி நகர் அணிந்தனர் - அருத்தி மாக்களே.               28

அன்புடைய அயோத்தி நகர மக்கள் நெருங்கிய கதிர்களையுடைய சூரியனைச் சீர்திருத்தும் தன்மையைப்போலவும் பாம்பின் இடையே படுத்துறங்கும் திருமாலின் அகன்ற மார்பின் நடுவில் அமைந்த கௌஸ்துப மணியினைச் சாணைப் பிடித்து  மாசு போக்குதலைப் போலவும் முன்போ அழகுற உள்ள அயோத்தி நகரை  மேலும் அலங்கரித்தார்கள்.

அந்நகரை அலங்கரித்த சிறப்புக் கூறப்படுகிறது

வெள்ளிய, கரியன, செய்ய, வேறுள

கொள்ளைவான் கொடிநிரைக் குழாங்கள் தோன்றுவ-

கள் அவிழ் கோதையான் செல்வம் காணிய

புள் எலாம் திருநகர் புகுந்த போன்றவே.                               29

வெண்மையானவை;  கருமையானவை;  செம்மையானவை;  வேறு பல நிறமானவை ஆக மிகுதியான  பெரியகொடி வரிசைக்கூட்டங்கள் நகரில் தோன்றுகின்றன.(அவை)மதுவிரியும் மாலையணிந்த இராமனது முடிசூட்டுவிழாச் செல்வத்தை காண பறவைகள் எல்லாம்அயோத்தியில் நுழைந்தவை போன்றுள்ளன,

 

மங்கையர் குறங்கென வகுத்த வாழைகள்;-

அங்கவர் கழுத்தெனக் கமுகம் ஆர்ந்தன;

தங்குஒளி முறுவலின் தாமம் நான்றன;

கொங்கையின் நிரைத்தன, கனக கும்பமே.                 30

                அயோத்தியில் மாதரது தொடை போல வாழை மரங்கள் நிறுத்தப் பட்டன.
அம்மகளிர் கழுத்துப் போலக் கமுக மரங்கள் நிறைந்தன. (அவரிடத்தே) வெள்ளொளி

நிறைந்த புன்சிரிப்புப் போல முத்துமாலைகள் தொங்கின.பொன்மயமான பூர்ண கும்பங்கள் மகளிரது தனங்களை ஒத்து விளங்கின.

 

முதிர் ஒளி உயிர்த்தன, முடுகிக் காலையில்

கதிரவன் வேறு ஒரு கவின் கொண்டான் என-

மதி தொட நிவந்து உயர் மகர தோரணம்

புதியன அலர்ந்தன புதவ ராசியே.                            31

கோபுர வாயிற் கதவுகளின் வரிசைத் தொகுதிகள் காலைப்பொழுதில் உள்ள இளஞ்சூரியன் விரைந்து சென்று (நண்பகலில்) வேறுபட்ட ஒர் அழகைக் கொண்டனன் என்று சொல்லும்படி சந்திரனைத் தொடும்படி உயர்ந்த மகரமீன் வடிவமாகச் செய்யப்பெற்ற தோரணங்கள் மிக்க சோபையை வீசினவாய் புதியனவாய் விளங்கப்பெற்றன.

 

துனி அறு செம்மணித் தூணம் நீல் நிறம்

வனிதை - ஓர் - கூறினன் வடிவு காட்டின;

புனை துகில் உறைதொறும் பொலிந்து தோன்றின,

பனி பொதி கதிர் எனப் பவளத் தூண்களே.                32

அழகிய (வெண்மையான) துணி உறைகளுக்குள்ளே விளங்கித் தோன்றுவனவாகிய குற்றம் அற்ற சிவந்த மாணிக்கத்தால் ஆகிய தூண்கள்  நீல நிறம் உடைய பார்வதியை தன்னுடைய இடப்பாகத்தில் உடையவன் ஆகிய சிவபெருமானது (திருநீறு பூசிய செம்மை) வடிவத்தைக் காண்பித்தன. (வெள்ளுறையில் பொதிந்த) பவளத்தால் ஆகிய தூண்கள் பனியில் மறைந்த காலைச் செஞ்சூரியன் என்னும்படி (விளங்கித் தோன்றின.)

முத்தினின் முழு நிலவு எறிப்ப, மொய்ம் மணிப்

பத்தியின் இள வெயில் பரப்ப, நீலத்தின்

தொத்து இனம் இருள் வரத் தூண்ட, சோதிட

வித்தகர் விரித்த நாள் ஒத்த, வீதியே.                                     33

 (அயோத்தி நகரத்) தெருக்கள் (அலங்கரித்த) முத்து மாலைகளில் உள்ள) முத்துக்களால் முழுமையான நிலவொளியை எங்கும் விளங்கச் செய்தன. நெருங்கிய
மணிக்கற்கள் வரிசை இளமையான வெயிலைப் பரவச் செய்தன. (அழகுபடுத்திய)  நீலமணிகளின் தொகுதியான கூட்டம் எங்கும் இருள் உண்டாகச் செய்ய (இவற்றால்)   சோதிட நூல் அறிஞர் விளக்கிக் கூறுகின்ற நாளை ஒத்தன.

 

ஆடல் மான் தேர்க்குழாம் அவனி காணிய

வீடெனும் உலகின் வீழ் விமானம் போன்றன;

ஓடைமாக் கடகளிறு உதய மால் வரை

தேடருங் கதிரொடும் திரிவ போன்றவே.                               34

                     பல்விதமான செலவுகளினால் நடனம்  இடுவது  போன்ற  குதிரைகள்  பூட்டப் பெற்ற தேர்த் தொகுதிகள் மண்ணுலகினைக்காணும் பொருட்டு சுவர்க்கம் என்கின்ற உலகத்திருந்தும் இறங்கிய விமானத்தை ஒத்தன.முகபடாம் அணிந்த பெரிய மதம் உடைய யானைகள் பெரிய
உதயமலை ஒப்புச் சொல்லுதற்கரிய சூரியனோடும் நகர வீதிகளில் திரிவனவற்றை
ஒத்திருந்தன.

 

வளங்கெழு திருநகர் வைகும் வைகலும்

பளிங்குடை நெடுஞ்சுவர் அடுத்த பத்தியில்

கிளர்ந்துஎரி சுடர்மணி இருளைக் கீறலால்-

வளர்ந்தில, பிறந்தில, செக்கர் வானமே.                                35

வளம் பொருந்திய அழகிய அயோத்தி நகரில் பொருந்திய பளிங்குக்
கற்களையுடைய பெரிய சுவர்களில் சேர்த்தமைத்த வரிசையாய் அமைந்துமிக்கு மேலேறிப் பிரகாசிக்கின்ற ஒளிபடைத்த செம்மணிகள் நாள்தோறும் 
மாலைப் பொழுதில் மேல் எழும் இருளைப் போக்குதலால் செவ்வானமானது; (அங்கு) 
புதிதாகத் தோன்றவில்லை வளரவும் இல்லை.

 

பூமழை, புனல்மழை, புது மென் சுண்ணத்தின்

தூமழை, தரளத்தின் தோம் இல் வெண் மழை,

தாம் இழை நெரிதலின் தகர்ந்த பொன் மழை,

மா மழை நிகர்த்தன - மாட வீதியே.                                     36

மாளிகைகளையுடைய தெருக்களில் மலர் மழையும் (நீர் தெளித்தலால்) நீர் மழையும் புதிய மென்மையான வாசனைப் பொடியின் தூய்மையான மழையும்முத்துக்கள் சிந்துதலால் குற்றமற்ற வெள்ளிய மழையும் பொன்னணிகள் நெருங்கி நெரிகின்ற காரணத்தால் (ஒன்றுடன்) ஒன்று மோதி) உடைந்து  பிதிர்ந்து  கொட்டியகனக மழையும் கூடி பெரியமழை பொழிவதை -ஒத்தன.

 

காரொடு தொடர் மதக் களிறு சென்றன,

வாரொடு தொடர் கழல் மைந்தர் ஆம் என;

தாரொடு நடந்தன பிடிகள், தாழ் கலைத்

தேரொடு நடக்கும் அத் தெரிவைமாரினே.                 37

வார்கயிற்றாற் கட்டிய வீரக்கழலை உடைய வீரர் போல மேகத்தோடு ஒப்புமை பற்றுகின்ற மதநீர் உடைய யானைகள் சென்றன.தொங்கக்கூடிய மேகலை யணிந்த தேர் போன்ற அல்குலோடு நடந்து செல்லும் அந்நாட்டுப்பெண்களைப் போல பெண் யாணைகள் தம்மேல்கட்டிய கிண்கிணி  மாலையுடன் சென்றன.

 

ஏய்ந்து எழு செல்வமும், அழகும், இன்பமும்,

தேய்ந்தில; அனையது தெரிந்திலாமையால்,

ஆய்ந்தனர் பெருகவும் - அமரர், இம்பரில்

போந்தவர், 'போந்திலம்' என்னும் புந்தியால்.                         38

                    பொருந்தி மேன்மேலும்  வளர்கின்ற  செல்வமும்  அழகும்  இன்பமும்  குறைந்திருக்க வில்லை. (பொன்னகரிற் போலவே நிறைந்துள்ளன). அத்தன்மையை  ஒத்தது முன்னர் அறியாதபடியால் (இராமனது முடிசூட்டுவிழாக் காண) அயோத்திக்கு வந்தவராகிய தேவர் இன்னும் அயோத்திக்கு வந்தோம் இல்லை என்கின்ற எண்ணத்தால் மிகவும் ஆராய்ந்தனர்.

 

நகர் அலங்கரிக்கப்படுதலைக் கூனி காணுதல்

அந் நகர் அணிவுறும் அமலை, வானவர்

பொன்னகர் இயல்பு எனப் பொலியும் ஏல்வையில்,

இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல்,

துன்ன அருங் கொடு மனக் கூனி தோன்றினாள்.                      39

     அந்த அயோத்தி நகரத்தை அழகு டுத்துகின்ற பேராரவாரத்தால்  தேவர்களது அமராவதிநகரத்தின் தன்மை எனச் சொல்லும்படி  விளங்குகின்ற நேரத்தில்(உலகிற்குத்) துன்பம் செய்கின்ற இராவணன் செய்த  தீமை (அவனை அழிக்க இப்பிறப்பில் உரு எடுத்து வந்தது) போல அணுகுதற்கரிய கொடிய மனம் படைத்த  கூனி என்னும் மந்தரை வெளியில் வந்து நகரைப் பார்த்தாள்.

கூனி கடுஞ்சினங் கொண்டு கைகேயி படுத்திருக்கும் இடத்தைச் சேர்தல் (40-42)

தோன்றிய கூனியும், துடிக்கும் நெஞ்சினாள்;

ஊன்றிய வெகுளியாள்; உளைக்கும் உள்ளத்தாள்;

கான்று எரி நயனத்தாள்; கதிக்கும் சொல்லினாள்;

மூன்று உலகினுக்கும் ஓர் இடுக்கண் மூட்டுவாள்.                    40

அவ்வாறு வெளியில் வந்த கூனியும் (நகர் அணிசெயப் பெறுவருகண்டு ஆத்திரம் அடைந்துகோபத்தால் துடிக்கின்ற மனமுடையவளாய் , கால்கொண்டு நிலைநின்ற கோபம் உடையவளாய்    வேதனைப்படும் மனம்    உடையவளாய் நெருப்புக்கக்கி எரிகின்ற கண்ணுடையளாய்படபடப்பாகத் தோன்றும்  சொல்லுடையவளாய்   மூவுலகங்களுக்கும்   ஒப்பற்ற (தீர்க்க முடியாத) துன்பத்தை செய்யத் தொடங்குகிறவளாய் (ஆயினள்)

 

தொண்டைவாய்க் கேகயன் தோகை கோயில்மேல்

மண்டினாள்-வெகுளியின் மடித்த வாயினாள்,

பண்டைநாள் இராகவன் பாணி வில்லுமிழ்

உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உள்ளுவாள்.     41

(இராமனது குழந்தைப் பருவமாகிய) முன்னாளில் இராமனது  கையில் உள்ள வில்லினால்  வெளிப்படுத்தப்பெற்ற மண்ணுருண்டை (தன்மேல்) பட்டதனை தன் மனத்தின்கண்  நினைத்து ,  கோபத்தால்  கீழ் உதட்டை மடித்துக் கடித்த  வாயை உடையவளாய்க்   கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயை உடைய  கைகேயியின்  மாளிகையிடத்து நெருங்கி, (‘எய்தினாள்’)

நாற் கடல் படு மணி நளினம் பூத்தது ஓர்

பாற்கடல் படு திரைப் பவள வல்லியே-

போல், கடைக் கண் அளி பொழிய, பொங்கு அணை-

மேல் கிடந்தாள் தனை, விரைவின் எய்தினாள்.                       42

நான்கு கடல்களிலும் உண்டாகிய சிறந்த மாணிக்கங்களால் ஆகிய தாமரை மலர்கள் பூத்ததாகிய  ஒப்பற்ற பாற்கடலின் அலைமேல் பொருந்திக் கிடந்த  பவளக் கொடிபோல   கண்ணின் கடை அருளைச்சொரிய (நுரை போலப்) பொங்குகின்ற (மெத்தென்ற வெள்ளிய) படுக்கையின்மேலே உறங்கு்கின்றவளை விரைவாகச் சென்றடைந்தாள்

கைகேயியின் பாதங்களை மந்தரை மெல்லத் தீண்டுதல்

எய்தி, அக் கேகயன் மடந்தை, ஏடு அவிழ்

நொய்து அலர் தாமரை நோற்ற நோன்பினால்

செய்த பேர் உவமைசால் செம் பொன், சீறடி

கைகளின் தீண்டினள் - காலக் கோள் அனாள்.                         43

                தீய காலத்தே தோன்றித் தீங்கு பயக்கும் ராகு,  கேது  என்னும் கிரகங்களை ஒத்த கூனிகை கேயியை அடைந்துஅந்தக் கைகேயினது    இதழ் விரிந்த மென்மையாகமலர்ந்த
தாமரையானது (நீரில் ஒரு காலில்
நின்று) செய்த அருந்தவத்தால் பெரிய
உவமையாக அமையும்படி பொருந்திய  சிவந்த பொன்னணி அணிந்த சிறிய பாதங்களை தன் கைகளால் தொட்டாள்

கைகேயி சிறிது துயிலுணர்கையில் மந்தரை கூறத் தொடங்குதல்

தீண்டலும் உணர்ந்த அத் தெய்வக் கற்பினாள்,

நீண்ட கண் அனந்தரும் நீங்குகிற்றிலள்;

மூண்டு எழு பெரும் பழி முடிக்கும் வெவ் வினை

தூண்டிட, கட்டுரை சொல்லல் மேயினாள்;                44

                (கூனி ) காலைத் தடவிய அளவில் துயிலுணர்ந்த அந்தத் தெய்வத் தன்மை பொருந்திய கற்பினை உடைய கைகேயி தன் நீண்டமைந்த கண்களில் தூக்க மயக்கமும் (முற்றாக) நீங்கப் பெற்றாளில்லை; (ஆனால் அதற்குள்ளாகவே கூனி) மேலும் மேலும் மிக்கெழுகின்ற பெரும்பழியை உண்டாக்கி முடிக்கப் போகின்ற கொடிய வினையானது;(அவள்உள் நின்று அவளைப் பேசும்படி) ஏவுதல் செய்ய பேச்சை பேசத் தொடங்கினாள்.

பேரிடர் வரவும் வருந்தாது துயிலலாமோ? என்று கூனி கூறுதல்

'அணங்கு, வாள் விட அரா அணுகும் எல்லையும்

குணங்கெடாது ஒளிவிரி குளிர்வெண் திங்கள்போல்,

பிணங்குவான் பேரிடர் பிணிக்க நண்ணவும்

உணங்குவாய் அல்லை; நீ உறங்கு வாய்' என்றாள்.      45

வருத்துகின்ற  கொடிய  விடப் பாம்பு ஆகிய இராகு நெருங்கும் நேரத்திலும்
தன் தன்மை சிறிதும் மாறாமல்  ஒளியை எங்கும் வீசுகின்ற  குளிர்ச்சியையுடைய
வெண்மையான சந்திரனைப் போல மாறுபடுகின்ற மிகப் பெரிய துன்பம்  உன்னைவருத்திக் கட்ட நெருங்கி  வரவும்  நீ (அதற்கு) வருந்துபவளாக இல்லை (நிம்மதியாகத்தூங்குகின்றாய்’ என்றாள்.

கைகேயிஎன் புதல்வர் யாவரும் அறந்திறம்பாதவராயிருக்க எனக்கு என்ன துன்பம்?’ எனல்.

வெவ்விடம் அனையவள், விளம்ப வேற்கணாள்,

'தெவ்வடு சிலைக்கை என் சிறுவர் செவ்வியர்;

அவ்வவர் துறைதொறும் அறம் திறம்பவர்;

எவ்விடம் எனக்கு வந்து அடுப்பது ஈண்டு?' எனா,      46

கொடிய நஞ்சையொத்த கூனி இவ்வாறுசொல்ல,  வேலை ஒத்த கண்ணையுடைய  கைகேயி பகைவரை அழிக்கும் வில்லைப் பிடித்த கைகை உடைய என் புதல்வர்   நலமாய் இருக்கின்றனர் அவரவர்களுடைய தொழில்களில் எல்லாம் தருமத்திலிருந்து மாறுபடாதவர்கள்  (எனவேஇப்பொழுது

கைகேயிஇராமன் புதல்வனாயிருக்கையில் எனக்கு இடருண்டாகாதுஎனல்.

'பராவரும் புதல்வரைப் பயக்க, யாவரும்

உராவருந் துயரைவிட்டு, உறுதி காண்பரால்;

விராவரும் புவிக்கெலாம் வேத மேயன

இராமனைப் பயத்த எற்கு இடர் உண்டோ?' என்றாள்.             47

 புகழ்தற்கு அரிய;  (நற்குணம் உள்ள) புத்திரரைப் பெறலால்  எல்லோரும் பிறரால் நீங்குதற்கரிய வலிய துன்பத்தை விட்டு நற்கதி அடைவர் ஒன்றோடொன்று கலவாத தனி வேறான   உலகங்களுக்கு எல்லாம் வேதத்தைப் போன்று விளங்குகின்ற இராமனைப் பெற்றெடுத்த எனக்கு துன்பம் உளதாகுமோ?’  என்றும்கூறினாள்.

கைகேயிக்குப் பொறாமை தோன்ற மந்தரை, ‘கோசலை வாழ்ச்சி பெற்றனள்எனல்

ஆழ்ந்த பேரன்பினாள் அனைய கூறலும்,

சூழ்ந்த தீ வினைநிகர் கூனி சொல்லுவாள்,

'வீழ்ந்தது நின்னிலம்; திருவும் வீழ்ந்தது;

வாழ்ந்தனள் கோசலை, மதியினால்' என்றாள்.                        48

(இராமன் பால்) ஆழங்காற்பட்ட பேரன்பு உடையவளாய் கைகேயி அத்தகைய வார்த்தைகளைச் சொல்லுதலும் (அவனைச்) சுற்றிக் கொண்ட பாவத்தை ஒத்த மந்தரை பேசத் தொடங்கி, உனது நன்மை அழிந்து போனது; உன் செல்வமும்  கெட்டது; உன் மாற்றாளாகிய கோசலை புத்தித் திறமையால் செல்வமும் நன்மையும் பெற்று வாழ்ந்தாள் என்று கூறினாள்.

 

கோசலைக்கு ஏற்கனவே ஏற்பட்டுள்ள பெருவாழ்வினைக் கைகேயி பாராட்டிக் கூறுதல்

அன்னவள் அவ் உரை உரைப்ப, ஆயிழை

'மன்னவர் மன்னனேல், கணவன், மைந்தனேல்

பன்ன அரும் பெரும் புகழ்ப் பரதன்; பார்தனில்

என் இதன்மேல் அவட்கு எய்தும் வாழ்வு?' என்றாள்.   49

மந்தரை (வாழ்ந்தனள் கோசலை என்ற) அந்த வார்த்தைகளைச் சொல்ல ஆராய்ந்த அணிகளை அணிந்த கைகேயி, ‘கணவன்  அரசர்களுக்கு அரசனாகிய சக்கரவர்த்தி தயரதனானால் எடுத்துரைத்தற்கரிய  பெரிய புகழை உடைய பரதன்  மகனானால்  இவ்வுலகில்  இதற்கும் மேலாக  கோசலைக்குக் கிடைக்கக்கூடிய புதிய வாழ்வு  என்ன இருக்கிறது?’ என்றுகூறினாள்.

மந்தரை கோசலைக்கு வரும் வாழ்வை எடுத்துக் கூறுதல்

'ஆடவர் நகையுற, ஆண்மை மாசு உற,

தாடகை எனும் பெயர்த் தையலாள் பட,

கோடிய வரி சிலை இராமன் கோமுடி,

சூடுவன் நாளை; வாழ்வு இது' எனச் சொல்லினாள்.     50

(‘என் இதன் மேல் அவட்கு எய்தும் வாழ்வு’ என்று கேட்ட கைகேயிக்கு மந்தரை)   ஆண்மையுடைய வீரர்கள் பரிகசிக்க ஆண்மைத் தன்மை குற்றம் அடைய தாடகை என்ற பெயரை உடைய  பெண் அழியும்படி  வளைந்த  கட்டமைந்த வில்லினை உடைய இராமன்,  நாளை அரச மகுடத்தைச் சூடிக்கொள்வான். இதுவே (கோசலைக்கு வரும்) வாழ்வு’  என்று  சொன்னாள்.

 

இராம பட்டாபிடேகத்தைக் கேட்டுக் கைகேயி கோசலைபோல மகிழ்தல்

மாற்றம் அஃது உரைசெய, மங்கை உள்ளமும்

ஆற்றல் சால் கோசலை அறிவும் ஒத்தவால்;

வேற்றுமை உற்றிலள், வீரன் தாதை புக்கு

ஏற்று அவள் இருதயத்து இருக்கவே கொலாம்?                      51

                அந்த வார்த்தையை மந்தரை சொல்ல, (அதுகேட்ட) கைகேயியின் மனமும்
பெருமை அமைந்த கோசலையின் புத்தியும் ஒத்திருந்தன கூனி கருதியது போல) வேறுபாடு கருதினாளில்லை;  (ஏனெனில்)  இராமன் தந்தையாகிய தயரதன் அந்தக் கைகேயியின் இதயத்தில் புகுந்து  இணங்கி இருந்ததனாற் போலும்.

இராமபட்டாபிஷேகச் செய்தியைக் கூறியதற்காகக் கைகேயி மந்தரைக்கு மணிமாலை யளித்தல்

ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ,

தேய்வு இலா முக மதி விளங்கித் தேசுற,

தூயவள் உவகை போய் மிக, சுடர்க்கு எலாம்

நாயகம் அனையது ஓர் மாலை நல்கினாள்.                 52

தூய்மையான கைகேயி உண்டாகிய பெரிய அன்பு என்கின்ற கடல் ஆரவாரித்து மேல்கிளம்ப,  களங்கம் இல்லாத முகமாகிய சந்திரன் பிரகாசித்து மேலும் ஒளியடைய   மகிழ்ச்சி எல்லை கடக்க  மூன்று சுடர்களுக்கும்  தலைமை பெற்றது போன்றதாகிய  ஒரு இரத்தினமாலையை (மந்தரைக்குப் பரிசாக) அளித்தாள்.

மந்தரை பெருவருத்தமடைந்து செய்த செயல்

தெழித்தனள்; உரப்பினள்; சிறுகண் தீயுக

விழித்தனள்; வைதனள்; வெய்து உயிர்த்தனள்;

அழித்தனள்; அழுதனள்; அம்பொன் மாலையால்

குழித்தனள் நிலத்தை-அக் கொடிய கூனியே.              53

கொடுமை படைத்த அந்தக் கூனி சப்தமிட்டாள்; அதட்டினாள்சிறிய கண்களில் இருந்து நெருப்புப் பொறி சிந்த விழித்துப் பார்த்தாள்திட்டினாள்வெப்பமாக மூச்சு விட்டாள் ; (தன்கோலத்தைக்) கெடுத்துக்கொண்டாள்;  அழுதனள்; (கைகேயி அளித்த) அழகிய பொன் மாலையினால்  பூமியைக் குழியாக்கினாள்.

கூனி, ‘நீ துயர்படச் சம்மதித்தாலும் கோசலையின் தாதியர்க்கு அடிமைசெய்ய நான் உடன்படேன்எனல்

வேதனைக் கூனி, பின் வெகுண்டு நோக்கியே,

'பேதை நீ பித்தி; நிற் - பிறந்த சேயொடும்

நீ துயர் படுக; நான் நெடிது உன் மாற்றவள்

தாதியர்க்கு ஆட்செயத் தரிக்கிலேன்' என்றாள்.                        54

துன்பத்தைச் செய்கின்ற கூனியானவள்  பிறகு  (கைகேயியை) கோபித்துப் பார்த்து, நீ அறிவற்றவள்மனநிலை சரியில்லாதவள்நீ உன்னிடம் பிறந்த பரதனோடும்  துன்பப்படுவாயாகநான் உன் சக்களத்தி கோசலையின்  தாதிகளுக்கு  நீண்ட காலம் அடிமை வேலை செய்ய பொறுக்க மாட்டேன்’ என்று சொன்னாள்.

இராமன் பத்தினியுடன் சிங்காசனத்திருக்க, நின்மகன் தரையிலிருக்கவேணுமே யெனல்

'சிவந்த வாய்ச் சீதையும் கரிய செம்மலும்

நிவந்த ஆசனத்து இனிது இருப்ப, நின் மகன்,

அவந்தனாய், வெறு நிலத்து இருக்கல் ஆன போது,

உவந்தவாறு என்? இதற்கு உறுதி யாது?' என்றான்.     55

 

சிவந்த வாயினை உடைய சீதையும் கருமையான மேனியுடைய இராமனும்
உயர்ந்த சிங்காசனத்தில் இனிமையாக வீற்றிருக்க நின் மகன் பரதன் ஒன்றுமற்றவனாய் தரையில் இருக்கும்படி நேரும் காலத்தில் (நீ)! மகிழ்ந்தகாரணம் யாது? இம்மகிழ்ச்சி அடைவதற்கு (நீ பெற்ற) நன்மை யாது?' என்று  கூறினாள்.

கோசலையினால் இராமன் அரசு பெற்று மேன்மையடையப் பரதன் தாழ்ச்சி பெறுவதை மந்தரை எடுத்துக் காட்டல்

'மறந்திலள் கோசலை, உறுதி மைந்தனும்,

சிறந்த நல் திருவினில் திருவும் எய்தினான்,

இறந்திலன் இருந்தனன்; என் செய்து ஆற்றுவான்?

பிறந்திலன் பரதன், நீ பெற்றதால்' என்றாள்.               56

 கோசலை (தனக்குரிய) நன்மையை மறந்தாளில்லை; (அதனால்) இராமனும் மேம்பட்ட;நல்ல செல்வங்களுக்கெல்லாம் மேம்பட்ட அரசச் அடைந்தான் நீ பிள்ளையாகப் பெற்றதால் செத்தானில்லை; என்ன காரியம் செய்து முடிப்பதற்காக இருந்துகொண்டுள்ளான் ‘பிறந்தும் பிறவாதவனே;’  என்று கூறினாள்.

மந்தரை பரதசத்துருக்கனர் தவஞ்செய்யச் செல்லலாமெனல்

'சரதம் இப் புவியெலாம், தம்பியோடும் இவ்

வரதனே காக்குமேல், வரம்பில் காலமும்

பரதனும் இளவலும், பதியின் நீங்கிப்போய்,

விரதமாம் தவம்செய விடுதல் நன்றுஎன்றாள்.                         57

                                      இந்த உலகமெல்லாம் மெய்யாக, இந்த இராமனே இலக்குமணனோடும்
(
சேர்ந்து)(அரசுநடாத்திக்)காப்பானாயின்  பரதனும்சத்துருக்கனனும் (இராமன்
அரசு செய்யும்) அளவற்ற காலங்கள் அயோத்தியிலிருந்து விலகிச் சென்று  உயர்ந்த தவமாகிய விரதத்தைச் செய்யும்படி அனுப்பி விடுதல்  அவனுக்கு நன்மை பயப்பதாம்  என்று கூறினாள் மந்தரை மறுபடியும்  வகைந்து கூறுவாள்.

பரதன் அரசர்வரிசையில் சேரப்பெறாவிடில் இறத்தலே நன்றெனல்

'பண்ணுறு கடகரிப் பரதன், பார்மகள்

கண்ணுறு கவினராய் இனிது காத்த அம்

மண்ணுறு முரசுடை மன்னர் மாலையில்

எண்ணுறப் பிறந்திலன்; இறத்தல் நன்று' என்றாள்.      58

அலங்கரித்தல் அமைந்த மத யானையையுடைய நிலமகள் விரும்பத் தக்க அழகுடையவராய் இனிமையாக அரசாண்ட அந்த மார்ச்சனை செறிந்த முரசத்தினை உடைய அரசர் வரிசையில் வைத்து நினைக்குமாறு(அரசனாக) பிறக்கவில்லை  (எனவே) உயிர்வாழ்வதனினும்இறப்பதே மேல்’

கேகய நாட்டிற்குப் பரதனையனுப்பியதன் காரணம் விளங்கிற்றென்றல்

'பாக்கியம் புரிந்திலாப் பரதன் தன்னைப்பண்டு

ஆக்கிய பொலங்கழல் அரசன், ஆணையால்

தேக்குயர் கல்லதர், கடிது சேணிடைப்

போக்கிய பொருள் எனக்கு இன்று போந்ததால்.'                     59

                பொன்னாற் செய்த வீரக் கழலை அணிந்த தயரதன் முன்பே (அரசாட்சி ஏற்கும்)பாக்கியம் செய்யாத பரதனை கட்டளையால் தேக்கு மரங்கள் நிரம்பிய மலைவழியில் வெகுதூரத்தில் (கேகய நாட்டுக்கு)
விரைவாக  (செல்லும்படி) அனுப்பிவைத்த  காரணம் தெரியவந்தது.

பரதனைக் குறித்து மந்தரை யிரங்குதல்

மந்தரை, பின்னரும் வகைந்து கூறுவாள்;

'அந்தரம் தீர்ந்து உலகு அளிக்கும் நீரினால்

தந்தையும் கொடியன்; நல் தாயும் தீயளால்;

எந்தையே! பரதனே! என்செய் வாய்?' என்றாள்.                     60

வகைப்படுத்திச்சொல்பவளாகி  என் தந்தையே! ’ பரதனே!  நடுவுநிலைமை  விலகி அரசை இராமனுக்குக்கொடுக்கும் தன்மையால்   தயரதனும் கொடியவன்; (அச்செயலுக்கு மகிழும் காரணத்தால்) உன்னைப் பெற்ற கைகேயியும் கொடியவள் (இவர்களுக்கிடையில் நீ) யாது செய்வாய்?’ என்றாள்

மீண்டும் மந்தரை கைகேயியை யிடித்துக் கூறுதல்

'அரசரில் பிறந்து, பின் அரசரில் வளர்ந்து,

அரசரில் புகுந்து, பேர் அரசி யான நீ

கரைசெயற் கருந்துயர்க் கடலில் வீழ்கின்றாய்;

உரைசெயக் கேட்கிலை; உணர்தியோ?' என்றாள்.       61

அரச குலத்தில் பிறந்து வளர்ந்து பட்டத்தரசியாக இருக்கிற உனக்கு, உன் அரசனாகாது மாற்றாள் மகன் அரசன் ஆவதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள எப்படி நேர்ந்தது? என்று கூறினாள்கூனி. கரை இடுவதற்கு முடியாத துன்பக்கடலில் வீழ்ந்து கொண்டேயிருக்கிறாய் (நான்) எடுத்துச் சொல்லியும் கேட்கின்றாயில்லை பின் அனுபவத்தால்  உணர்வாயோ?;’  

மந்தரை பரதனது அரசியற் குணங்கள் எல்லாம் பயனற்றுப் போவதற்கு இரங்குதல்

'கல்வியும், இளமையும், கணக்கில் ஆற்றலும்,

வில்வினை உரிமையும், அழகும், வீரமும்,

எல்லையில் குணங்களும், பரதற்கு எய்திய;

புல்லிடை உகுத்த அமுது ஏயும் போல்' என்றாள்.                    62

பரதனுக்கு அளவில்லாத வல்லமையும் வில் தொழிலில் திறமையும் அளவில்லாத நற்குணங்களும் வந்து பொருந்தி உள்ளன;(அரசன் ஆகாவிடின் அவை அனைத்தும்)  புல்தரையில் சொரிந்த தேவர் அமுதம் போலப் பயனற்றதாக ஆகும் போலும்;’ என்றாள்.

மந்தரையின் கொடுஞ்சொற்கேட்டுக் கைகேயி சினந்து கூறத் தொடங்குதல்

வாய் கயப்புற மாந்தரை வழங்கிய வெஞ் சொல்,

காய் தனல்தலை நெய் சொரிந்தென, கதம் கனற்ற,

கேகயர்க்கு இறை திருமகள், கிளர் இள வரிகள்

தோய், கயல் கண்கள் சிவப்புற நோக்கினள், சொல்லும்;           63

வாய் கசக்கும்படி கூனி கூறிய கொடிய வார்த்தை எரிகின்ற நெருப்பிடத்தில்  நெய் ஊற்றினாற் போல கோபத்தை  மேலும்  தூண்டி  எரியச்செய்ய  (அதனால்)
கேகய நாட்டு அரசனது அழகுப் பெண்ணான கைகேயி எழுந்த இளங்கோடுகள் பொருந்திய   கயல் போன்ற கண்கள்  (சினத்தால்) செம்மை அடைய  பார்த்து  பேசத் தொடங்கினாள்

கைகேயி மந்தரையைக் கடிந்து கூறுதல்

வெயில் முறைக் குலக் கதிரவன் முதலிய மேலோர்,

உயிர் முதல் பொருள் திறம்பினும், உரை திறம்பாதோர்;

மயில் முறைக் குலத்து உரிமையை, மனு முதல் மரபை;

செயிர் உற, புலைச் சிந்தையால், என் சொனாய்? - தீயோய்!

64

கொடியவளே! ஒளிவரிசையை உடைய சிறந்த சூரியன் முதலாகிய உயர்ந்தோர்கள் உயிர் முதலாகிய பொருள்கள் போவதாயினும் சத்தியத்தினின்றும் மாறுபடார். (அத்தகையமயிலினது முறைமையைக் கொண்ட அரசகுலத்து உரிமையை உடைய வைவச்சுத மனுவின் வழித் தோன்றல்களாக உள்ள அயோத்தியின் அரச பரம்பரையைக் குற்றம் பொருந்தும்படி  கீழ்மைப் புத்தியால்  யாது பேசினாய்?’

'எனக்கு நல்லையும் அல்லை நீ; என் மகன் பரதன் -

தனக்கு நல்லையும் அல்லை; அத் தருமமே நோக்கின்,

உனக்கு நல்லையும் அல்லை; வந்து ஊழ்வினை தூண்ட,

மனக்கு நல்லன சொல்லினை - மதி இலா மனத்தோய்!            65

அறிவில்லாத நெஞ்சினை உடையவளே! நீ எனக்கு நன்மையைச் செய்பவள்
அல்லள்;  என் மகனாகிய பரதனுக்கு நன்மையைச் செய்பவளும் அல்லள்;  அந்த அரச தருமத்தை ஆராய்ந்தால்  உனக்கு நன்மையைச்செய்து கொள்பவளும் அல்லள்; (நீ) செய்த முன்னைய வினை (விதிவழியாக) வந்து உன்னைச் செலுத்த  (அதனால்) உன் மனத்துக்கு இதமானவற்றைச் சொன்னாய்.

'பிறந்து இறந்துபோய்ப் பெறுவதும், இழப்பதும், புகழே;

நிறம் திறம்பினும், நியாயமே திறம்பினும், நெறியின்

திறம் திறம்பினும், செய்தவம் திறம்பினும், செயிர்தீர்

மறம் திறம்பினும், வரன்முறை திறம்புதல் வழக்கோ? 66

  (மக்கள்) பிறந்து இறந்து சென்று அடைவதும், இழந்து விடுவதும் புகழே ஆகும். ஒளி மாறுபட்டாலும் நேர்மை மாறுபடினும் நல்வழியின் கூறு மாறுபடினும்  செய்யும் நல்ல தவம் மாறுபடினும் குற்றம் நீங்கிய வீரம் மாறுபடினும் தம் குலத்தினது மரபு முறைமை மாறுபடுதல்  நியாயமோ?’

 

'போதி, என் எதிர்நின்று; நின் புன் பொறி நாவைச்

சேதியாது இது பொறுத்தனன்; புறம் சிலர் அறியின்,

நீதி அல்லவும், நெறி முறை அல்லவும், நினைந்தாய்

ஆதி; ஆதலின், அறிவு இலி! அடங்குதி' என்றாள்.       67

   அறிவற்றவளே! என் எதிரிலிருந்து அகலுவாயாக  உன்னுடைய அற்ப உரைக்கிடன் ஆகிய நாக்கை துண்டித்துப் போக்காமல்   இக்குற்றத்தைப் பொறுத்தேன்; புறத்தே உள்ள சில மனிதர் அறிவாராயின் நீதிக்கும்  நெறி முறைகளுக்கும்  மாறுபாடாக சதி செய்தாய் ஆவாய்; பேசாமல்
அடங்குவாய்’ என்றாள்.

 

நீ சினந்தாலும் உனக்கு உறுதிகூறப் பின்வாங்கேனென்று காலில் வீழ்ந்து மந்தரை கூறத் தொடங்குதல்

அஞ்சி மந்தரை அகன்றிலள், அம் மொழி கேட்டும்,

நஞ்சு தீர்க்கினும் தீர்கிலாது அது நலிந்தென்ன,

'தஞ்சமே! உனக்கு உறு பொருள் உணர்த்துகை தவிரேன்;

வஞ்சி போலி!' என்று, அடிமிசை வீழ்ந்து, உரைவழங்கும். 68

      கூனியானவள் கைகேயி கூறிய அச்சொற்களைக் கேட்கும் விடத்தை (மணி, மந்திரம்,
மருந்து  முதலியவற்றால்)தீர்த்தாலும் நீங்காது அந்த  விடம் (மீண்டும்) வருத்துதல் போல வஞ்சிக் கொடி போல்பவளே (எனக்குப்) பற்றுக்கோடாக இருப்பவளே உனக்கு நன்மை தரும் செயல் அளிவித்தலின்று நீங்கமாட்டேன்’  என்று சொல்லி (கைகேயியின்) கால்களில் விழுந்து வணங்கி மீண்டும் பேசலானாள்.

 

மந்தரையின் துர்ப்போதனை

'மூத்தவற்கு உரித்து அரசு எனும் முறைமையின் உலகம்

காத்த மன்னனின் இளையன் அன்றோ கடல்வண்ணன்?

ஏத்து நீள் முடி புனைவதற்கு இசைந்தனன் என்றால்,

மீத் தரும் செல்வம் பரதனை விலக்குமாறு எவனோ? 69

வயதில் முதிர்ந்தவனுக்கு அரசு உரிமையானது என்கின்ற முறையை வைத்துப்
பார்த்தால்  உலகத்தை ஆளுகின்ற தயரதனை விட கடலின் நீல நிறத்தையுடைய இராமன் வயதில் இளையவன் அல்லனோ? (தன்னைவிட வயதில் இளைய இராமன்) பாராட்டப் பெறும் நீண்ட மகுடத்தைச் சூடுதற்கு  தயரதன் சம்மதித்தான் என்றால்   மேம்பாட்டைத் தருகின்ற அரசச் செல்வம் இராமனில் இளைய பரதனுக்கு உரியது அன்று என்று நீக்குவது எவ்வாறு?

'அறன் நிரம்பிய அருளுடை அருந்தவர்க்கேனும்,

பெறல் அருந்திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம்;

மறம் நினைந்து உமை வலிகிலராயினும், மனத்தால்

இறலுறும்படி இயற்றுவர், இடையறா இன்னல்.                     70

கோசலை முதலியோர் இன்றைக்கு உங்களிடும் நட்பாக இருப்பதுபோல் அரசபதவி பெற்றபிறகும்இருப்பார்கள் என்று கருதாதே,  கருவியால் நேரே கொல்லாவிடினும், மனத்தால் துன்பத்தைச் செய்வர்; அது பொறாமல் நீங்களாகவே இறந்தபடுவீர்கள். செல்வம் பெற்றபின் சிந்தை வேறாவது
முனிவர்க்கும் உள்ளது  என்றால்,  சாமானியர்களாய இவர்கள் அதற்கு  எம்மாத்திரம்? - என்பது கூனியின் வாதம்,

'புரியும் தன்மகன் அரசு எனில், பூதலம் எல்லாம்

எரியும் சிந்தனைக் கோசலைக்கு உடைமையாம்; என்றால்,

பரியும் நின்குலப் புதல்வற்கும், நினக்கும் இப் பார்மேல்

உரியது என், அவள் உதவிய ஒரு பொருள் அல்லால்!   71

 தன் புதல்வன் அரசாளுவான் ஆயின் இப்பூமி முழுவதும் (பெற்றது  போதாது  என்றுமேலும் பெறவேண்டும் என்று) அகன்று செல்லும் மனத்தை உடைய கோசலா தேவிக்கு  சொந்தமாகிவிடும். உன்னிடத்து  அன்புடைய சிறந்த புத்திரனாகிய பரதனுக்கும் உனக்கும் இப்பூமியில் அந்தக் கோசலை  கொடுத்த செல்வம் அல்லாமல் சொந்தமாக இருப்பது என்ன?’

 

'தூண்டும் இன்னலும், வறுமையும், தொடர்தரத் துயரால்

ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு, இரு நிதி, அவளை

வேண்டி ஈதியோ? வெள்குதியோ? விம்மல் நோயால்

மாண்டு போதியோ? மறுத்தியோ? எங்ஙனம் வாழ்தி?             72

                  (தம்மைப் பிச்சை எடுக்க) ஏவுகின்ற துன்பமும் தம்மைப் பின்பற்றி வர நின் மனைக்குவந்து உன்னிடம்  யாசித்தவர்களுக்கு மிக்க செல்வத்தை அந்தக் கோசலையைக் கேட்டு  (வாங்கிக்)கொடுப்பாயா?; 
(அல்லது)  (அவளைக்) கேட்க மனம் இல்லாமல் நாணப்பட்டுநிற்பாயா? (இந்த அவல நிலை நமக்கு
உண்டாயிற்றே என்ற) துன்ப நோயினால் (இதைவிடச் சாவதே மேல் என்று) தற்கொலை செய்துகொள்வாயா(அல்லது) (இரந்தவர்களிடமே போய்) இல்லையென்று மறுப்பாயா?; எவ்வாறு வாழப்போகிறாய்?’

 'சிந்தை என் செயத் திகைத்தனை, இனி, சில நாளில்,

தம்தம் இன்மையும், எளிமையும், நிற்கொண்டு தவிர்க்க,

உந்தை, உன் , உன் கிளைஞர், மற்ற உன் குலத்து உள்ளோர்,

வந்து காண்பது உன் மாற்றவள் செல்வமோ? மதியாய்!            73

அறிவுடையவளேஎன்ன செய்யலாம் என்று (உன்) மனத்தில் தடுமாற்றம் அடைந்தாய். வருங்காலத்து சில நாள்களில் உன் தந்தை, உன் அண்ணன் , உன் பிறந்த வீட்டுக்கு உறவினர்கள் மேலும், உன் குலத்தைச் சேர்ந்தவர்கள் (ஆகியோர்) தங்களது  வறுமையையும் தாழ்ச்சியையும் உன்னைக் கொண்டு போக்கிக் கொள்ளலாம் என்று இங்கே வந்து (நீ அதற்கு முடியாமல் உள்ளபடியால்) பார்ப்பது   உன் சக்களத்தியின்  செல்வத்தையோ?   

'காதல் உன் பெருங் கணவனை அஞ்சி, அக் கனி வாய்ச்

சீதை தந்தை, உன் தாதையைத் தெறுகிலன்; இராமன்

மாதுலன் அவன்; நுந்தைக்கு வாழ்வு இனி உண்டோ ?

பேதை! உன் துணை யார் உளர் பழிபடப் பிறந்தார்?    74

 

அறிவில்லாதவளேஉன்மேல்அளவிறந்த அன்புடைய உன் உயரிய நாயகனான தயரதனுக்குப் பயந்து அந்தக் கொவ்வைக் கனி போலச் சிவந்த வாயையுடைய சீதையின் தந்தையாகிய சனகன்   உன்னுடைய தந்தையாகிய கேகய அரசன் மீது படையெடுத்து அழித்திலன்;  அந்தச் சனகன் இராமனுக்கு மாமன்;  (இராமன் சக்கரவத்தி ஆனால் சனகன் கை ஓங்கிவிடும்) உன் தந்தையாகிய கேகயனுக்கு இனி வாழ்வு  உண்டா? (அழிவுதான்);  உன்னளவுக்கு பழி உண்டாகும் படி பிறந்தவர்கள் யார் இருக்கின்றார்கள் (ஒருவரும் இல்லை).

'மற்றும் நுந்தைக்கு வான்பகை பெரிதுள மறத்தார்

செற்ற போது, இவர் சென்று உதவார் எனில், செருவில்

கொற்றம் என்பது ஒன்று, எவ்வழி உண்டு? அது கூறாய்?

சுற்றமும் கெடச் சுடு துயர்க் கடல் விழத் துணிந்தாய்!               75

மேற்சொல்லியதன்மேலும் உன் தந்தையாகிய கேகயனுக்கு மிகப் பெரிய பகைகள் இருக்கின்றன;  அப்பகைவர்கள்  (உன் தந்தையை அழிக்கப்) போரிட முனைந்த போது  கோசல நாட்டார் (உன் தந்தைக்கு உதவி யாகச்) சென்று போரில் உதவாவிட்டால் சண்டையில்  வெற்றி என்பதாகிய ஒன்றுஎப்படி எவ்விதத்தில் (உன் தந்தைக்கு) உண்டாகும்அந்த வழியைச் சொல்லு (ஆகவே); உறவின் முறையாரும்அழிய சுடுகின்ற துன்பக் கடலில் (நீயும்) விழுவதற்கு உறுதி கொண்டு விட்டாய் ( போலும்).

'கெடுத்து ஒழிந்தனை உனக்கரும் புதல்வனைக் கிளர்நீர்

உடுத்த பாரக முடையவன், ஒருமகற்கு எனவே

கொடுத்த பேரரசு அவன்குலக் கோமைந்தர் தமக்கும்,

அடுத்த தம்பிக்குமாம்; பிறர்க்கும் ஆகுமோ?' என்றாள்.            76

உன்னுடைய பெறுதற்கரிய மகனாகிய பரதனை  வீணாக்கி அழிந்தாய்;   மேலெழும்புகின்ற  நீரையுடைய கடலை  ஆடையாக  உடுத்த நிலவுலகத்தை  தன் உடைமையாகப் பெற்ற சக்கரவர்த்தி தயரதன் ஒப்பற்றதன் இராமனுக்காக ஆட்சியுரிமை கொடுத்துவிட்ட கோசல அரசு. இராமன் குலத்தில் தோன்றும் அரசகுமார்களுக்கும்  இராமனை எப்பொழுதும் சார்ந்து சிடக்கின்ற தம்பியாகிய இலக்குமணனுக்கும்  ஆகும்.  (அப்படியல்லாது) வேறு பிறருக்கு (பரதனுக்கு) மீள வருமோ? (வராதுஎன்று கூறி முடித்தாள்.

மந்தரையின் போதனையினாற் கைகேயியின் மனம் மாறுபடுதல்

தீய மந்தரை இவ் உரை செப்பலும், தேவி

தூய சிந்தையும் திரிந்தது - சூழ்ச்சியின் இமையோர்

மாயையும், அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும்,

ஆய அந்தணர் இயற்றிய அருந் தவத்தாலும்.              77

கொடிய கூனி  இவ்வார்த்தைகளைச் சொன்ன அளவிலே  (எதை எவ்வாறு நடத்துவது என்ற) ஆலோசனையில் சிறந்த இமையோர்களது மாயையினாலும் தேவர்கள் (திருமாலிடம்) பெற்றுக்கொண்ட  நல்ல வரம் இருக்கின்றபடியாலும் அறவோர் ஆகிய வேதியர் செய்த செய்தற்கு அரிய தவத்தாலும் கைகேயியின் தூய மனமும்  மந்தரை வழியில் மாறியது.

இதுவும் அது

அரக்கர் பாவமும், அல்லவர் இயற்றிய அறமும்,

துரக்க, நல்லருள் துறந்தனள் தூமொழி மடமான்;

இரக்கம் இன்மை அன்றோ, இன்று இவ் உலகங்கள் இராமன்

பரக்கும் தொல்புகழ் அமுதினைப் பருகுகின் றதுவே.?             78

                இராக்கதர் (செய்த) தீவினையும்  தேவரும் முனிவரும் செய்த நல்வினையும்(மறைந்து) ஏவுதலால் நல்ல இரக்கத்தைக் கைவிட்டாள் தூய மொழிகளைப் பேசும் இளைய மான் போலும் கைகேயியின் கருணை இல்லாத தன்மையால் அல்லவா இந்த உலகம் எல்லாம் இன்றைக்கும் இராமபிரானது எங்கும் பரந்து  செல்லும் பழமையாகிய புகழ் என்கின்ற அமுதத்தை (செவிகளால்)உண்டு (ஆனந்தம்
அடைகின்றது)!

கூனியைக் கைகேயி பரதன் முடிசூட்டும் உபாயம் கூறுமாறு வேண்டுதல்

அனைய தன்மையள் ஆகிய கேகயன் அன்னம்,

வினை நிரம்பிய கூனியை, விரும்பினள், நோக்கி,

'எனை உவந்தனை; இனியை என் மகனுக்கும்; அனையான்

புனையும் நீள் முடி பெறும்படி புகலுதி' என்றாள்.                   79

அப்படிப்பட்ட மனம் மாறின தன்மை உடையளாகிய கைகேயி சூழ்ச்சி நிறைந்தவளாகிய மந்தரையை விரும்பிப் பார்த்து என்னிடம் பிரியம் வைத்துள்ளாய்; நீ என்மகனாய பரதனுக்கும் நல்லவளே; அந்தப் பரதன்  அழகு செய்யப் பெற்ற உயர்ந்த முடியை அடையும் விதத்தைச் சொல்லுக என்றாள்.

என் சொல்லைக் கேட்டால் உன் மகற்கு முடிசூட்டிவிப்பேனென்று மந்தரை கூறுதல்

மாழை ஒண் கணி உரைசெய, கேட்ட மந்தரை, 'என்

தோழி வல்லள்; என் துணை வல்லள்' என்று, அடிதொழுதாள்;

'தாழும் மன் நிலை; என் உரை தலைநிற்பின், உலகம்

ஏழும் ஏழும் உன் ஒரு மகற்கு ஆக்குவென்' என்றாள். 80

   (பிளந்த) மாவடுவைப் போலும் ஒள்ளிய கண்களையுடைய கைகேயி (இவ்வாறு) சொல்ல
அதுகேட்ட கூனி என் தோழி வல்லமையுடையவள் என் உதவியாய தலைவி திறமைக்காரியே எனச் சொல்லிகைகேயி காலில் வணங்கினாள்; (பிறகு)  அரசனாகிய தயரதன் கொண்டுள்ள முடிவு தாழ்ச்சியடையும் என் சொல்லை (நீ) உன்னுடைய  தலைமேற் கொண்டு நிற்பதனால்
உன்னுடைய ஒப்பற்ற மகனாகிய பரதனுக்கு பதினான்கு உலகங்களையும்   உரிமையாகச் 

செய்வேன் என்று சொன்னாள்.

 

முன் மன்னவ னளித்துள்ள இரண்டு வரங்களைக் கேட்குமாறு மந்தரை கூறுதல்

'நாடி ஒன்று உனக்கு உரைசெய்வென்; நளிர் மணிநகையாய்!

தோடு இவர்ந்த தார்ச் சம்பரன் தொலைவுற்ற வேலை,

ஆடல் வென்றியான் அருளிய வரம் அவை இரண்டும்

கோடி' என்றனள், உள்ளமும் கோடிய கொடியாள்.      81

       உடம்பு வளைந்து  கூனி யானாற்போல  உள்ளமும் கோணிப்போனகொடியவளாய மந்தரை
‘நளிர்மணி குளிர்ந்த முத்துமணியைப் போன்ற புன்சிரிப்பை உடையவளே ஒன்று ஒரு
செய்தியை ஆராய்ந்து சொல்லுகிறேன் பூவிதழ் செறிந்த வெற்றிமாலை அணிந்தசம்பராசுரன்போரில் (தயரதன்பால்) தோல்வியுற்று அழிந்தபோது விளையாட்டாகப் போரில் வெற்றி சூடும் தயரதன்உனக்குக் கொடுத்த இரண்டு வரங்களாகிய  அவற்றை (இப்போது அவனிடம்) கொள்வாயாக;’ 
என்று  (உபாயம்) கூறினாள்.

 

மந்தரை இருவரங்கள் இன்னவையெனக் குறித்தல்

'இரு வரத்தினில், ஒன்றினால் அரசு கொண்டு, இராமன்

பெரு வனத்திடை ஏழ் - இரு பருவங்கள் பெயர்ந்து

திரிதரச் செய்தி, ஒன்றினால்; செழு நிலம் எல்லாம்

ஒருவழிப்படும் உன் மகற்கு; உபாயம் ஈது' என்றாள்.   82

  அவ்விரண்டு வரங்களுள் ஒரு வரத்தால் அரசாட்சியை  உன் மகனதாக ஆக்கிக்கொண்டு மற்றொன்றினால் பெரிய காட்டின்கண் பதினான்கு ஆண்டுகள் (அயோத்தியிலிருந்து)நீங்கி ஓரிடத்தில் இல்லாமல் சுற்றியலையச் செய்வாயாக;  (செய்தால்)  உன் மகனாகிய  பரதனுக்கு வளப்பமான உலகமுழுதும் அடங்கி நேர்படும்;   இதுவே உபாயமாகும்

கைகேயி கூனியைக் கொண்டாடுதல்

உரைத்த கூனியை உவந்தனள், உயிர் உறத் தழுவி,

நிரைத்த மா மணி ஆரமும் நிதியமும் நீட்டி,

'இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய்;

தரைக்கு நாயகன் தாய் இனி நீ' எனத் தணியா.                        83

(இவ்வுபாயம்) சொன்ன மந்தரையை மகிழ்ந்து இறுகத் தழுவிக்கொண்டுசிறந்த மணிக்கற்கள் வரிசையாக வைத்துச் செய்யப் பெற்ற மாலையும், ஏனைய செல்வங்களும் அளித்து என் ஒப்பற்ற  புதல்வனுக்கு ஒலிக்கும் கடல் சூழ்ந்த உலகத்தைக் கொடுத்தாய். (ஆதலால்) இனிமேல் நீயே பூமிக்கரசனாகிய பரதனின் தாய் ஆவாய் என்று  தாழ்ந்துபாராட்டி

கைகேயி தன் துணிவை மந்தரைக்குக் கூறுதல்

"நன்று சொல்லினை; நம்பியை நளிர்முடி சூட்டல்;

துன்று கானத்தில் இராமனைத் துரத்தல்; இவ் இரண்டும்

அன்றது ஆம்எனில், அரசன்முன் ஆர் உயிர் துறந்து

பொன்றி நீங்குதல் புரிவென்யான்; போதிநீ" என்றாள். 84

நீ நல்ல உபாயம் சொன்னாய்பரதனைச் செறிந்த மகுடத்தால் சூட்டுதலும்
இராமனை நெருங்கிய காட்டில் ஓட்டுதலும்  இந்த இரண்டும் அல்லாமல் போமாயின்   சக்கரவர்த்தியாகிய தயரதன் எதிரில்  நான் என்னுடைய பெறுதற்கரிய உயிரை விட்டு  இறந்து இவ்வுலகை விட்டு நீங்குதலைச்  செய்வேன்;  நீ போவாயா என்று சொன்னாள்.

 

கைகேயி தன்னையலங்கோலமாகச் செய்து கொள்ளல்

கூனி போனபின் குலமலர்க் குப்பைநின் றிழிந்தாள்

சோனை வார்குழற் கற்றையிற் சொருகிய மாலை

வான மாமழை நுழைதரு மதிபிதிர்ப் பாள்போல்

தேன வாவுறு வண்டின மலமரச் சிதைத்தாள்.             85

தன் பணிப்பெண்ணாகிய  மந்தரை விடை பெற்றுச் சென்றபின்பு, கைகேயி சிறந்த  மலர்களின் குவியலால் ஆகிய படுக்கையிலிருந்து இறங்கி கருமேகம் போன்ற தன் நீண்ட கூந்தல் தொகுதியில் சூடியிருந்த பூ மாலையை விண்ணிலே பெரிய கார்காலத்து மேகத்தில் நுழைந்திருக்கின்ற சந்திரனை இழுத்துச்
சிதறவிப்பவள் போல பூவில் உள்ள தேனை விரும்பி மொய்க்கின்ற வண்டுக் கூட்டம் நிலைகெட்டுச்
சுழலுமாறு கூந்தலிலிருந்து பிடுங்கிச் சிதைத்தெறிந்தாள்.

விளையுந் தன்புகழ் வல்லியை வேரறுத் தென்னக்

கிளைகொண் மேகலை சிந்தினள் கிண்கிணி யோடும்

வளைது றந்தனண் மதியினன் மறுத்துடைப் பாள்போல்

அளக வாணுத லரும்பெறற் றிலதமு மழித்தாள்.                     86

வளரும் தன்புகழாகிய கொடியை வேரொடு அறுத்தாற் போல  ஒளியைக் கொண்ட மேகலாபரணத்தை அறுத்தெறிந்தாள் பாதக் கிண்கிணியுடனே கை வளையல்களையும் கழற்றி நீக்கினாள் சந்திரனிடத்தில் இருக்கும் களங்கத்தை  அகற்றுபவளைப் போலகூந்தலைச் சார்ந்து  அமைந்துள்ள ஒளி பொருந்திய நெற்றியில் உள்ள பெறுதற்கரிய திலகத்தையும் துடைத்தாள்.

தாவின் மாமணிக் கலன் மற்றுந் தனித்தனிச் சிதறி

நாவி மென்குழல் நானிலந் தைவரப் பரப்பிக்

காவி யுண்டக ணஞ்சனங் கான்றிடக் கலுழாப்

பூவு திர்ந்ததொர் கொம்பெனப் புவிமிசைப் புரண்டாள்.  87

 

பின்னும் குற்றமற்ற பெரிய மணிகளால் ஆகியஅணிகளையும்வேறு வேறாகச்
சிதைத்தெறிந்துபுழுகுநெய் பூசப்பட்ட கூந்தலை தரையிலே  புரளுமாறு பரப்பிக்கொண்டு
நீலமலர் போன்ற மையுண்ட கண்கள் மைகரைந்து  சிந்தும்படி கண்ணீர்விட்டு அழுதுகொண்டு மலர்களை யெல்லாம் உதிர்த்துவிட்ட ஒரு வெறுங்கொம்புபோல தரைமேல் விழுந்து  உருண்டாள்.

அலங்கோலமாகக் கிடந்த கைகேயியின் வருணனை

நவ்வி வீழ்ந்தென நாடக மயிறுயின் றென்னக்

கவ்வை கூர்தரச் சனகியாங் கடிகமழ் கமலத்து

அவ்வை நீங்குமென் றயோத்திவந் தடைந்தவன் மடந்தை

தவ்வை யாமெனக் கிடந்தனள் கேகயன் றனயை.                    88

கேகயன் மகளாகிய கைகேயி மான் விழுந்தாற் போலவும் ஆடும் இயல்புடைய மயில்ஆடல் ஒழிந்து தூங்கினாற் போலவும் துன்பம் மிக மணங்கமலும் செந்தாமரையில்  வீற்றிருக்கும் தாயாகிய திருமகள்
அயோத்தியை விட்டு நீங்குவாள்’  என்று கருதி அயோத்தி நகரத்தை வந்து சேர்ந்த
அத்திருமடந்தையின் தமக்கையாகிய மூதேவி என்னுமாறு சோர்ந்து கிடந்தாள்
.

 

 

 

 



 


 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

வில்லிபாரதம் : மற்போர் சருக்கம் _ வில்லிபுத்தூரர்

தமிழ்விடு தூது