வில்லிபாரதம் : மற்போர் சருக்கம் _ வில்லிபுத்தூரர்
வில்லிபாரதம்
_ வில்லிபுத்தூரர்
மற்போர் சருக்கம்
· பலாயனன் மல்லன் என்ற வீமசேனனின் திறமைகளும், விராடமன்னவனின் பாராட்டுகளும்
· வீமன் – வாசவனுடனான மற்போர்
· வீமனின் மற்போர் ஆற்றல்
வாசவன் என்ற மற்போர் வீரன் பல மல்லர் சூழ விராடன்
அவை சார்ந்து, தன் பெருமை கூறுதல்
அல்லினுக்கு இந்து என்ன ஆங்கு அவர் உறையும் நாளில்,
'வில்லினுக்கு இராமன் என்ன, வேலினுக்கு இளையோன் என்ன,
சொல்லினுக்கு உததி தோய் கைத் தொல் முனி என்ன, வன்போர்
மல்லினுக்கு ஒருவன் யானே; வாசவன்' என்று வந்தான்
1
இராப்போதில் சந்திரன் சிறப்புற்றிருப்பது போல, (மிக்கசிறப்புற)
அந்த விராடநகரிலே அந்தப்பாண்டவர், வசித்து
வருகின்ற காலத்தில் வில்வித்தையில் ஸ்ரீராமன் போலவும்,
வேற்படையில்
(சிவபிரானுடைய) இளைய குமாரனாகிய முருகக் கடவுள் போலவும்
தமிழ்மொழிக்கு சமுத்திரம் படிந்த கைகளையுடைய பழமையான
அகத்திய முனிவன் போலவும், உடல்வலிமை கொண்டு செய்யப்படுகிற மல்லயுத்தத்திற்கு வாசவனாக
யானே ஒப்பற்றவன் என்று சொல்லிக் கொண்டு, (ஒருமல்லவீரன்) (அந்த விராடநகரில்)
வந்து சேர்ந்தான்
அண்ட மா முகடோடு ஒத்த சென்னியன்; அவனி முற்றும்
கொண்ட மா மேரு ஒத்த குங்குமக் கடகத் தோளான்;
சண்டமாருதத்தோடு ஒத்த வலியினன்; தந்தி எட்டின்
கண்டம் ஆர் முகத்தின் நீண்ட கை எனத் திரண்ட காலான்
2
(அந்தமல்லன்), அண்டத்தின் பெரிய மேலிடத்தையொத்த [ஓங்கிய] தலையையுடையவன்; தாங்கிக்கொண்டுள்ள சிறந்த மேருமலை போன்ற குங்குமச்சேறு பூசிய கடகமென்ற தோள்களையையணிந்த தோளையுடையவன்; கொடுங்காற்றோடு ஒப்பிடத்தக்க பலத்தையுடையவன்; அஷ்டதிக்கஜங்களின் கழுத்தையொட்டியுள்ள முகத்தினின்று நீண்டுள்ள துதிக்கைபோல திரண்டுள்ள கால்களையுடையவன்;
ஆயிரம் மல்லர் தன்னை அணி நிழல் என்னச் சூழ,
'பாய் இரும் புரவித் திண் தேர்மிசை வரும் பரிதி போல,
மா இரு ஞாலம்தன்னில் மற்று இவற்கு எதிர் இன்று!' என்ன,
சேய் இருந் தடக் கை வேந்தன் திருந்து அவைஅதனைச் சேர்ந்தான். 3
பலமல்லர்கள் அணி நிழல் என்ன அழகிய நிழலைப்போல சூழ்ந்து வர பாய்ந்து செல்லும் இயல்புள்ள பெரிய குதிரைகள் பூட்டிய வலிய தேர்மீது வரும் சூரியன் போல், (பாயிரும் புரவித்திண்தேர்மிசை வந்து) மிகப் பெரிய பூமியிலே இந்தமல்லற்கு ஒப்பானவர் இல்லையென்று (கண்டவர்)சொல்லுமாறு செவ்விய பெரிய நீண்ட கைகளையுடைய விராடராசனது திருத்தமுற்ற சபையை வந்தடைந்தான்;
விராடன் வாசவனுக்கு உரிய சிறப்புச் செய்து,தனது மல்லர்களை நோக்க, அவர்கள் தனித்தனி
அவனுடன் மற்போர் செய்தல்
மன்னனை வணங்கி நின்று, 'வலியுடை மல்லின் போருக்கு
என் அலது இல்லை, இந்த எழு கடல் வட்டத்து!' என்றான்;
கொல் நவில் வேலினானும், கொடுப்பன கொடுத்து, முன்னம்
தன்னுழை வைகும் மல்லர்தங்களை நோக்கினானே. 4
(வந்த மல்லவீரன்) விராடராசனை, வணங்கி நின்று தேகபலத்தைக்கொண்டு செய்கின்ற
மற்போரிலே ஏழு கடல்களாற்சூழப்பட்ட இந்தப் பூமண்டலத்தில்
என்னையல்லாமல்
(வேறொருவரும்) இல்லை என்று (தன்திறமையைத்) தெரிவித்தான்.
கொல்லுதற்றொழிலிற் பயின்ற
வேற்படையையுடைய விராடராசனும் (அவனுக்குக்கொடுக்கத்தக்க) சிறப்புக்களை, கொடுத்து (அந்த மல்லவீரன் வருதற்கு) முன்னமே தன்னிடத்துத்
தங்கியுள்ள மல்லர்களை, நோக்கினான்;
அந்த மல் தொழிலின் மிக்கோர் அநேகர், நீடு அசனி ஒப்பார்,
வந்த மல் தலைவன் தன்னை, 'வருதி நீ, எம்மொடு!' என்று,
முந்த மற் கலை நூல் சொன்ன முறைமையின், அரசன் காண,
சந்த மற் சமரம் செய்தார், தனித்தனி ஒருவராக. 5
(வந்த மல்லவீரன் வல்லமை பெற்றுள்ள) அந்த மற்போர்த் தொழிலிலே மிகவல்லவரான
பேரிடியை யொப்பவராய் (க்கர்ச்சித்துக்கொண்டு) மல்லர்
தலைவனை,எம்முடனே, நீ (மற்போர்செய்ய) வருவாய் என்று விராட மன்னவன் கண்டு கொண்டிருக்க
விரைவாக மற்போர்த் தொழிலைப் பற்றிய சாஸ்திரஞ்சொன்ன முறைமையினால் அழகிய மற்போரை தனித்தனியே ஒவ்வொருவராக செய்தார்;
எல்லோரையும் வென்ற வாசவனுக்கு விராடன் எல்லாச் சிறப்புக்களும் செய்தல்
தத்தியும், தோளும் தோளும் தாக்கியும், சென்னி கொண்டு
மொத்தியும், பற்பல் சாரி முடுகியும், வயிரக் கையால்
குத்தியும், காலும் காலும் கோத்தும், மற் கூறு தோன்ற
ஒத்தியும், பாறை என்ன உரனுடன் உரங்கள் சேர்த்தும், 6
தாவியும் தோளுடன் தோள் பொருந்த மோதியும் தலையைக்கொண்டு இடித்தும்பலபல
சாரிகளால் விரைந்தும் வயிரம் போலுறுதியான கைம்முஷ்டிகளாற் குத்தியும் காலுடன் கால்
சேரப்பின்னியும் மற்போரின் கூறுபாடு புலப்பட சிறிது பின்னிடைந்தும் பாறை ஒன்றோடொன்று
சேர்க்கப்படுவதுபோல மார்போடு மார்பைச்
சேர்த்தும்,
ஓர்
ஒரு மல்லர் ஆக ஒரு தனி மல்லன்தன்னோடு
ஆர் அமர் உடற்றி, மல்லர் அனைவரும் அழிந்த பின்னர்,
வீரரில் வீரன் ஆன வென்றி வேல் விராடன் மெச்சி,
தேரின்மேல் வந்த மல்லன்தனக்கு எலாச் சிறப்பும் செய்தான். 7
ஒப்பற்ற தனித்த மல்லனான (வந்த அந்த) வீரனோடு ஒவ்வொரு
மல்லவீரராக,
அருமையான மற்போரை பொருது, (இங்ஙனம்),எல்லாமல்லர்களும்
தோற்ற பிறகு வீரர்கட்குட் சிறந்த வீரனென்று மதிப்புப்பெற்ற வெற்றிபொருந்திய
வேற்படையையுடைய விராடராசன், (வந்த மல்லவீரனைப்) பாராட்டி, தேரின்மேல்வந்த (அந்த) மல்லனுக்கு
எல்லாச்சிறப்புகளையும், செய்தான்.
மறுநாள் தருமன் விராடனிடம், 'வாசவனை வெல்லுதற்குத்தக்கான் நின் மடையர் தலைவன் பலாயனன்' என்ன, அரசன்அவனை அழைத்து வரச் செய்தல்
அன்று போய் மற்றை நாளின் அரசனோடு அறத்தின் மைந்தன்,
'வென்ற மா மல்லன்தன்னை வெல்லுதற்கு உரிய மல்லன்,
இன்று நின் மடையர்தம்மில் பலாயனன் என்போன்தன்னை
அன்றி, வேறு இல்லை' என்றான்; அரசனும், 'அழைமின்' என்றான். 8
அன்று போய் மற்றைநாளிலே விராடராசனுடனே தருமபுத்திரன் நேற்று
வெற்றிபெற்ற சிறந்த மல்லவீரனை ஜயிப்பதற்கு ஏற்ற
மற்போர் செய்பவன். இப்போது உன்னுடைய சமையற்காரர்க்குள் போன் பலாயனனென்பவனை யல்லாமல்
வேறொருத்தர் இல்லை விராடராசனும் (அந்தப்பலாயனனை)
அழைத்து வாருங்கள் என்று கூறினான்
வீமன் வாசவனுடன் மற்போர் பொருது, வெற்றி பெறுதல்
பைம் பொன் மா மேரு வெற்பின் பராரையைச் சோதி நேமி
விம்பமாய் வளைந்தது என்ன, விளங்கு பொன் கச்சை வீக்கி,
தம்பம் ஆம் என்னத் தக்க தண்டொடு, தரணி வீழா உம்பர் ஆர் அமுதம் உண்ட உரவினான், விரைவின் வந்தான். 9
பூமியிற் கிடைக்காத தேவர்களின் அரிய அமிருதத்தை யுண்ட வலிமைபடைத்தவனான
வீமன், பசும்பொன்மயமான பெரிய மேருமலையின் பருத்த அரையை சோதி நேமி வட்டமாக வளைந்து கொண்டுள்ளது
என்னுமாறு விளங்குகின்ற பொற்கச்சையை இடையிற் கட்டிக்கொண்டு தம்பமோ என்று கருதும்படியுள்ள
தண்டாயுதத்துடனே, விரைவின் வந்தான்.
கதையுடைக் காளை வந்து, கடுந் திறல் மல்லன்தன்னோடு,
உதயமோடு அத்தம் என்னும் ஓங்கல் ஓர் இரண்டு சேர்ந்து
துதைவுறப் பொருவதேபோல், தோள் புடைத்து, உருமின்
ஆர்த்து, பதயுகத்தாலும், தம்தம் பாணிகளாலும், சேர்ந்தார். 10
கதாயுதத்தையுடைய இளவீரனான பலாயனன் கொடிய திறமையையுடைய மல்லனோடு வந்து சேர்ந்ததனால், (அவ்விருவரும்) உதயமலையோடு அத்தமலை யெனப்படும் ஓரிரண்டுமலையும் ஒன்றுசேர்ந்து நெருங்குதல் பொருந்த போர் செய்வதுபோல, தோள் (தம்தோள்களைத்) தட்டியும் இடிபோலக் கர்ச்சித்தும் இரண்டுபாதங்களாலும் தங்கள் தங்களுடைய கைகளாலும் நெருங்கிப் பொருதார்கள்
உதைத்தனர், வீசி வன்போடு; உரம்கொடு கரங்கள் எற்றிப்
புதைத்தனர், விரல்கள் மெய்யில்; புருவமும், மூக்கும், வாயும்,
சிதைத்தனர்; புயங்கள் என்னும் சிலம்புகள் தாக்கத் தாக்கப்
பதைத்தனர்; ஓடி ஓடிப் பற்றினர், மீள மீள. 11
(ஒருவரை யொருவர்)
வலிமையோடு உதைத்தனர்; வலிமையோடு கைகளால்
மோதி விரலின் வடு உடம்பிலே புதையும்படி செய்தார்கள்;
புருவங்களையும்
மூக்குகளையும் வாயோடு, பழுது படச்செய்தனர். (மாற்றானுடைய)
தோள்களென்கிற மலைகள் மோதுவதனால் (வலிதாங்க மாட்டாமல்) துடித்து ஓடி யோடிப்போய் மீண்டும் மீண்டும் (ஒருவரையொருவர்
மற்போர் புரியுமாறு) பற்றிக் கொண்டார்கள்.
கற்றன காயம் எல்லாம் கண்டு, கண் களிக்கக் காட்டி,
உற்றனர் நின்ற போதில், ஊதையின் புதல்வன்-ஊரு
மற்றவன் மருங்கு பற்ற, வன் கரம் மிடறு பற்ற,
செற்றனன்,-இடிம்பன்தன்னைச் செற்ற வெங் கொற்றத் தோளான். 12
(தாம்) அறிந்துள்ளனவான இலக்குக்களை யெல்லாம் (பார்ப்பவர்)கண்கள் கண்டு களிக்குமாறு தோற்றுவித்து
நெருங்கினவராய்,(அவ்விரண்டுமல்லரும்) இடிம்பன் தன்னை இடிம்பாசுரனை யழித்த கொடிய வெற்றி
தங்கிய தோள்களையுடையவனான காற்றின் குமாரனாகிய வீமசேனன் தன்னுடைய) தொடை, மற்றொருவனான
மல்லனுடைய இடுப்பைச் சுற்றியவண்ணம் பற்றிநிற்க
வலிய கையானது (அவன்) கழுத்தைப் பற்றிநிற்க (வந்த) மல்லனை யழித்திட்டான்;
வென்ற பலாயனன் என்னும் வீமனுக்கு விராடன் பல வரிசைகள் அளித்துப் பாராட்டுதல்
தேர்மிசை வந்த மல்லன் சிதைந்த பேர் உறுப்பினோடும்
பார்மிசைக் கிடக்க, நின்று, பணைப் புயம் கொட்டி ஆர்த்தான்;
சீர் மிகு மல்லன்தன்னைச் சிறப்புறத் தழுவி, 'எல்லாப்
போர்முகங்களுக்கும் நின்னைப் போல்பவர் இல்லை!' என்றான். 13
தேர் மிசை வந்த மல்லன் அழிந்திட்ட (தன்னுடைய)பெரிய உறுப்புக்களுடனே பூமியின்மீது விழுந்துகிடக்க, (வெற்றிபெற்று) நின்று கொண்டு (தன்னுடைய) பருத்த தோள்களைக்கொட்டி யாரவாரஞ்செய்பவனான சிறப்புப்பொருந்திய மல்லனான பலாயனனென்று பேர்பூண்ட வீமசேனனை சிறப்புப் பொருந்த, கட்டிக் கொண்டு (உன்னை) ஒத்திருப்பவர்,இல்லை என்று (விராடமன்னவன்) பாராட்டிக் கூறினான்;
மன்னவர் களிக்கத்தக்க வரிசைகள் அனைத்தும் நல்கி,
முன்னவன் ஆகி வைகும் முனி மனம் களிக்குமாறு,
தன் அருகு அணுக வைத்து, 'தலத்து எதிர் இல்லை, இந்த
இன் அமுது அடுவோற்கு!' என்றான், இயல் திறல்விராடன்தானே. 14
பொருந்திய திறமையையுடைய விராடராசன் அரசர்களுக்கு கொடுத்தற்கு உரிய சிறப்புக்களையெல்லாம் (அந்த வென்ற பலாயனனென்ற மல்லனுக்குக்) கொடுத்து, (தன்)முன்னிடத்தி லிருப்பவனாகித் தங்கியுள்ள கங்கபட்டனென்ற முனிவனுடைய நெஞ்சம் மகிழ்ச்சியடையுமாறு, (அந்தப்பலாயனனை) தன்னுடைய சமீபத்திலே சேரவைத்து, இனிய சமையலைச் சமைக்கும் இந்தப் பலாயனனுக்கு ஒப்பானவர், இந்தப் பூமியிலே,இல்லை என்றான். (அந்தப் பலாயனன் திறமையைக் கொண்டாடிக்)கூறினான்.
_ வில்லிப்புத்தூராழ்வார்
Comments
Post a Comment