நெடுநல்வாடை உரையுடன்

நெடுநல்வாடை

 

பாடியவர்:  மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்

திணை:  வாகை

துறை:  கூதிர்ப்பாசறை

பாவகை:  அகவல்பா (ஆசிரியப்பா)  

மொத்த அடிகள் 188

 

புலவர்கீரன் என்பது இப்புலவர் பெருமானின் இயற்பெயர்.  என்னும் சிறப்புப் பொருளைத்தரும் இடைச்சொல் சேர்த்து நக்கீரன் என்றாயிற்று. திருமுருகாற்றுப்படையை இயற்றியவரும் இவரே.  இவர் தந்தையார் மதுரையில் ஆசிரியராக இருந்தவர்.

 

பாட்டுடைத் தலைவன்:  பாண்டிய மன்னன் தலையாலங்கானத்துச்

                                                      செருவென்ற நெடுஞ்செழியன் 

 

நெடுநல்வாடை:  இப்பெயர் நெடிய நல்ல வாடை என்பதால் பண்புத் தொகையாயிற்று. தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்கு நெடிதாகத் தோன்றும் வாடையைக் கூறுவதால் இப்பாடல் பாலைத் திணைக்குரிய உரிப்பொருளை உணர்த்திற்று (பிரிதலும் பிரிதல் நிமித்தமும்).  வேற்று நிலத்திற்குப் போய்ப் போரினை வென்ற மன்னனுக்கு இது நல்லதாகிய வாடை ஆயிற்று.  இது பாலைக்குப் புறனாகிய வாகைத் திணை ஆகும்.

 

கதைச்சுருக்கம்: 

கூதிர்ப்பருவத்தில் மன்னன் போருக்குச் சென்றுள்ளான்.  அரசி துணை இல்லாது வருந்தி அரண்மனையில் உறைகின்றாள்; செவிலியர் தேற்றியும் ஆறுதல் அடையாதவள்.  இடையர்களும் பிற மக்களும் வாடையின் குளிரால் துன்புறுகின்றனர். பறவைகளும் விலங்குகளும் துன்புறுகின்றன.  நெல்லும் மலரும் தூவி இறைவனை வணங்கும் பெண்கள், சுருக்கு விசிறி, அரண்மனை அமைப்பு முறை, அந்தப்புரத்தின் அமைப்பு, செம்பினால் புனைந்த சுவர்கள், அரசியின் மிக அழகிய கட்டில், யவனர் இயற்றிய பாவை விளக்கு, மன்னன் தன்னுடைய போர் மறவர்களோடு கனிவுடன் இருத்தல், வாளினால் ஏற்பட்ட அவர்களின் புண்களைக் காணுதல் என்பன நெடுநல்வாடையில் காண்பன.

.

மழைப்பொழிவு

வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ,
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென (1-2)

பொருள்:  உலகம் குளிரும்படி வலது புறமாக எழுந்து வளைந்துத் தவறாதுப் பொழியும் முகில்கள் புது மழையைப் பொழிந்தன.

கோவலர் நிலை

ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்,
ஏறுடை இன நிரை வேறு புலம் பரப்பிப்
புலம் பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்   5
நீடு இதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ,
மெய்க்கொள் பெரும் பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க  (3-8)

பொருள்:  வெள்ளத்தை வெறுத்த கொடிய கோலையுடைய இடையர்கள் ஏற்றையுடைய நிரைகளை (பசு, எருமை, ஆடு) வேறு நிலங்களில் மேய விட்டு, நிலத்தைவிட்டு நீங்கிய தனிமையால் கலங்கி, தங்கள் தலையில் அணிந்திருந்த நீண்ட இதழ்களையுடைய வெண்காந்தள் மலர்க் கண்ணிகளிலிருந்து நீர் அலைத்ததால் உடம்பில் கொண்ட பெரும் குளிர்ச்சிக்கு வருந்தி, பலருடன் சேர்ந்து கையை நெருப்பிலே காய்த்தவர்கள் தங்கள் கையால் தங்களுடைய கன்னத்தைத் தட்டி, பல்லைக் கொட்டி நடுங்க,

கூதிர்க்காலத்தின் தன்மை

மா மேயல் மறப்ப, மந்தி கூர,
பறவை படிவன வீழக் கறவை   10
கன்று கோள் ஒழியக் கடிய வீசி,
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் (9-12)

பொருள்:  விலங்குகள் மேய்தலை மறந்தன.  பெண் குரங்குகள் மிகுந்த குளிர்ச்சியை அடைந்தன.  மரங்களில் தங்குவனவாகிய பறவைகள் மரங்களிலிருந்து விழுந்தன.  பாலுண்ணலை விடும்படி சினத்தால் பசுக்கள் தங்கள் கன்றுகளை உதைத்துத் தவிர்த்தன.  மலையைக் குளிர்ப்பதுப் போல் குளிர்ச்சியாக இருந்தது நடு இரவு.

மழைக்காலச் செழிப்பு

புன் கொடி முசுண்டைப் பொறிப்புற வான்பூப்
பொன் போல் பீரமொடு புதல் புதல் மலரப்
பைங்கால் கொக்கின் மென்பறைத் தொழுதி   15
இருங்களி பரந்த ஈர வெண்மணல்
செவ்வரி நாரையொடு எவ்வாயும் கவரக்
கயல் அறல் எதிரக் கடும் புனல் சாஅய்ப்
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை
அகல் இரு விசும்பில் துவலை கற்ப,   20
அங்கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த
வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க,
முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்
கொழு மடல் அவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை
நுண் நீர் தெவிள வீங்கிப் புடை திரண்டு   25
தெண் நீர் பசுங்காய் சேறு கொள முற்ற,
நளி கொள் சிமைய விரவு மலர் வியன் காக்
குளிர் கொள் சினைய குரூஉத் துளி தூங்க  (13-28)

பொருள்:  மென்மையான கொடியையுடைய முசுண்டையின் திரண்ட புறத்தையுடைய வெள்ளை மலர்கள் பொன்னைப் போன்ற பீர்க்க மலர்களுடன் புதர்கள்தோறும் மலர, பச்சைக் கால்களையுடைய கொக்கின் மென்மையான இறகுகளையுடைய கூட்டம் கரிய சேறு பரந்த ஈர வெள்ளை மணலில் சிகப்பு வரியினையுடைய நாரையுடன் எவ்விடத்திலும் நீரின் ஓட்டத்திற்கு எதிராக நீந்தும் கயல் மீன்களைப் பிடித்துத் தின்பதற்காகக் காத்து நிற்க, மிக்க நீரைப் பொழிந்து தங்களுடைய மழை பெய்யும் தன்மை கெட்டதால் எழுந்து பொங்கும் வெள்ளை முகில்கள் அகன்ற பெரிய வானில் துளிகள் தூவுதற்குப் புதிதாக கற்க, அங்கே அகன்ற வயலில் மிகுந்த மழையினால் வளப்பமான இலைகளையுடைய நெல்லின் முதிர்ந்த கதிர் முற்றி வளைய, பெரிய அடியையுடைய கமுக மரங்களின் நீலமணியை ஒத்த கழுத்தில் பருத்த பாளை விரிந்து திரட்சியைக் கொண்ட பெரிய குலைகள் நுண் நீருடன் திரண்டு விளங்கிப் பக்கங்கள் திரண்டு தெளிந்த நீரினைக் கொண்ட பசுமையான காய்கள் இனிமை கொள்ளும்படி முற்ற, அடர்ந்த மலை உச்சியில் கலந்த மலர்களையுடைய  பெரிய சோலையின் குளிர்ந்த மரக்கிளைகளில் நிறத்தையுடைய நீர்த் துளிகள் தொங்க,

தெருக்களில் சுற்றித் திரியும் முழுவலி மக்கள் நிலை

மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில்,   30
படலைக் கண்ணி பரு ஏர் எறுழ் திணி தோள்
முடலை யாக்கை முழு வலி மாக்கள்
வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து
துவலைத் தண் துளி பேணார், பகல் இறந்து
இரு கோட்டு அறுவையர் வேண்டுவயின் திரிதர,  (29-35)

பொருள்:  உயர்ந்த மாடங்களையுடைய வளப்பமான பழைய ஊரில் உள்ள ஆறு கிடந்தாற்போல் இருந்த அகன்ற நீண்ட தெருவில், தழை கலந்த மாலையை அணிந்த பருமனான அழகான தோள்களையும் இறுக்கமான உடலையும் உடைய வலிமையான ஆண்கள், வண்டுகள் மொய்க்கும் கள்ளைக் குடித்து, மிகவும் மகிழ்ந்து, நீர்த் துவலையின் குளிர்ந்த துளியைப் பொருட்படுத்தாது பகல் கழிந்த பொழுதிலும், முன்னும் பின்னுமாகத் தொங்கும் ஆடையை அணிந்த அவர்கள், தங்களுக்கு வேண்டிய இடத்தில் திரிய,

பெண்களின் மாலைக்கால வழிபாடு

வெள்ளி வள்ளி வீங்கு இறைப் பணைத்தோள்,
மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல்,
பூங்குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக்கண்
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து   40
அவ்விதழ் அவிழ் பதம் கமழப் பொழுது அறிந்து
இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ,
நெல்லும் மலரும் தூஉய், கைதொழுது,
மல்லல் ஆவணம் மாலை அயர (36-44)

பொருள்:   வெள்ளைச் சங்கு வளையல்களையும், இறுகின முன்கையையும், மூங்கில் போலும் தோளையும், மென்மையான சாயலையும், முத்தைப் போன்ற பற்களையும், சிறப்பான காதணியின் அழகிற்குப் பொருந்திய உயர்ந்த அழகிய ஈரக்கண்களையும் மடப்பத்தையும் உடைய பெண்கள், பூந்தட்டிலே இட்டு வைத்த மலரும் பருவம் அமைந்த பச்சைக் காம்பைக் கொண்ட, பிச்சி மலர்களின் அழகிய இதழ்கள் மலர்ந்து நறுமணம் கமழ, நேரத்தை அறிந்து, இரும்பினால் செய்த விளக்கின் எண்ணெய்யைக் கொண்ட திரியைக் கொளுத்தி, நெல்லும் மலரும் தூவி, கையால் தொழுது, வளப்பமான கடைவீதியில், மாலை நேரத்தில் கொண்டாட,

கூதிர் கால நிலை

புறாவின் நிலை

மனை உறை புறவின் செங்கால் சேவல்  45
இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது,
இரவும் பகலும் மயங்கி கையற்று,
மதலைப் பள்ளி மாறுவன இருப்ப,
கடியுடை வியல் நகர்ச் சிறு குறுந்தொழுவர்
கொள் உறழ் நறுங்கல் பலகூட்டு மறுக,   50
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
தென் புல மருங்கில் சாந்தொடு துறப்பக் (45-52)

பொருள்:  இல்லத்தில் வாழும் புறாவின் சிவப்புக் காலையுடைய ஆண் புறா தன்னுடைய இன்பம் நுகரும் பெண் புறாவுடன் ஊர் மன்றத்திற்குச் சென்று இரையைத் தேடித் தின்னாமல் இரவையும் பகலையும் அறியாமல் மயங்கி, செயலற்று, வீட்டின் வெளிப்பகுதியில் உள்ள கூரையின் அடியில் உள்ள பலகையில் கால்களை மாற்றி மாற்றி வைத்து இருக்க, காவலுடைய பெரிய மனைகளில் சிறு பணிகளைச் செய்யும் பணியாளர்கள் கொள்ளின் நிறத்தை ஒத்த நறுமணப்பொருட்கள் அரைக்கும் கல்லில் சந்தனம், கத்தூரி போன்ற நறுமணமான பொருட்களை அரைக்க, வடநாட்டினர் தந்த வெள்ளை நிறத்தையுடைய வட்டக் கல் தென்திசையின் சந்தனத்துடன் பயன்படாமல் கிடக்க,

மகளிர் நிலை

கூந்தல் மகளிர் கோதை புனையார்,
பல் இருங் கூந்தல் சில் மலர் பெய்ம்மார்,
தண் நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து  55
இருங்காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்பக்  (53-56)

பொருள்:  பெண்கள் தங்கள் கூந்தலில் மலர்ச்சரங்களை அணியவில்லை.  அடர்ந்த கருமையானக் கூந்தலில் மங்கலமாதல் கருகி ஒரு சில மலர்களையே அணிந்தனர்.  தகர மரத்தின் குளிர்ச்சியுடைய நறுமணமான துண்டுகளை நெருப்பில் எரித்து அதில் கரிய அடர்ந்த (வைரம் பாய்ந்த) அகில் மரத்துண்டுகளுடன் வெள்ளை கண்ட சருக்கரையைச் சேர்த்துப் புகைத்தனர்.

விசிறியும் சாளரமும்

கை வல் கம்மியன் கவின் பெறப் புனைந்த
செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந் தறிச்
சிலம்பி வான் நூல் வலந்தன தூங்க,
வான் உற நிவந்த மேனிலை மருங்கின்   60
வேனில் பள்ளித் தென் வளி தரூஉம்
நேர்வாய்க் கட்டளை திரியாது, திண் நிலைப்
போர்வாய்க் கதவம் தாழொடு துறப்பக் (57-63)

பொருள்:  கைத்தொழிலில் வல்லவன் அழகாக உருவாக்கிய சிவப்பு நிற ஆலவட்டம் (சுருக்கு விசிறி) சுருக்கப்பட்டு, வளைந்த மரத்தறியில் தொங்கியது.  அதில் சிலந்தி வெள்ளை நூலால் கட்டிய வலை தொங்கியது.  வானத்தைத் தீண்டும் உயர்ந்த மேலான இடத்தில் உள்ள வேனிற்காலத்துப் படுக்கை அறைக்குத் தென்றலைக் கொண்டு வரும் திண்மையான நிலையையுடைய நேரான சன்னலின் நன்கு பொருந்திய கதவுகள், காற்று நுழைய முடியாதபடி திறமையாக மூடப்பட்டுத் தாழிட்டுக் கிடந்தன.

நெருப்பை விரும்புதல்

கல்லென் துவலை தூவலின், யாவரும்
தொகு வாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார்,  65
பகு வாய்த் தடவில் செந் நெருப்பு ஆர (64-66)

பொருள்:  ஒலியுடன் மழைத் துளி தூவுவதால் எல்லோரும் குவிந்த வாயையுடைய (சிறிய வாயையுடைய) குடத்தின் தண்ணீரைக் குடிக்கவில்லை.  அகன்ற வாயையுடைய நெருப்பு வைக்கும் கும்மட்டிச்சட்டியின் சிவந்த நெருப்பை அனுபவித்தனர்.

ஆடல் மகளிரின் செயல்

ஆடல் மகளிர் பாடல் கொளப் புணர்மார்,
தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை
கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ,
கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப  (67-70)

பொருள்:  ஆடும் பெண்கள், குளிரால் தன் நிலைகுலைந்த தங்களுடைய  யாழானது பாட்டினைக் கொள்ளும்படி நரம்பைக் கூட்டுவதற்காக, அதன் இனிய ஒலி எழுப்பும் நரம்புகளை, திரண்டு எழும் தங்களுடைய வெப்பமான முலைகளில் தடவி, கரிய தண்டையுடைய சிறிய யாழில், பண்ணிற்கு ஏற்றாற்போல் சுருதி கூட்டினார்கள்.

காதலர் பிரிந்தோரை வாட்டும் கூதிர்

காதலர்ப் பிரிந்தோர் புலம்ப பெயல் கனைந்து
கூதிர் நின்றன்றால் போதே (71-72)

பொருள்:  தங்களுடைய காதலர்களிடமிருந்து பிரிந்தவர்கள் வருந்துமாறு மழை மிகுந்தது.  குளிர்காலம் நிலைத்தது அப்பொழுது.

அரண்மனையை அமைப்பு

……………..மாதிரம்
விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்
இரு கோல் குறி நிலை வழுக்காது குடக்கு ஏர்பு
ஒரு திறம் சாரா அரை நாள் அமயத்து,  75
நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு,
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி,
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து (72-78)

பொருள்:  திசைகளிலே விரிந்த கதிர்களைப் பரப்பிய அகன்ற இடத்தையுடைய கதிரவன், இரண்டு கோல்கள் நடும்பொழுது நிழல் எந்தப் பக்கமும் சாயாத, மேற்குத் திசையில் எழுகின்ற உச்சிப்பொழுதில், சித்திரைத் திங்களின் நடுப்பகல் நேரத்தில், நூலைக் கற்று அறிந்தவர்கள் நுணுக்கத்துடன் கயிற்றினை இட்டு, திசைகளை நோக்கி, கடவுளை வணங்கி, புகழ்பெற்ற மன்னனுக்குப் பொருத்தமாக அரண்மனையைக் கட்டி அறைகளைக் கூறுபடுத்தி,

அரண்மனை வாயில்

ஒருங்கு உடன் வளைஇ, ஓங்கு நிலை வரைப்பின்
பரு இரும்பு பிணித்து, செவ்வரக்கு உரீஇ,   80
துணை மாண் கதவம் பொருத்தி, இணை மாண்டு
நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்து
போது அவிழ் குவளைப் புதுப் பிடி கால் அமைத்து,
தாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பில்
கை வல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து   85
ஐயவி அப்பிய நெய்யணி நெடு நிலை
வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக,
குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில் (78-88)

பொருள்:  ஒருசேர இடங்களையெல்லாம் வளைத்து, உயர்ந்த நிலையையுடைய மதில் அருகில், பருத்த ஆணியால் கட்டி, சிவப்பு அரக்கைத் தடவி, மாட்சிமைப்பட்ட இரட்டைக் கதவுகளைச் சேர்த்து, சிறப்பாக இணைத்து, உத்திரம் என்னும் விண்மீனின்  பெயர் பெற்ற மரத்தின் பலகையைக் கதவுக்கு மேலே வைத்து (உத்தரக்கட்டை), கதவில் மலரும் குவளை பூப் போன்ற புதிய கைப்பிடிகளை அமைத்து, தாழொடு சேர்த்த, பொருந்துவதாய் அமைந்த, கைத்தொழிலில் வல்லமை உடையவன் இணைத்ததால் இடைவெளி இல்லாது இருந்தது கதவு.  அதில் வெண்கடுகின் சாந்தும் நெய்யும் கலந்த கலவை தடவப்பட்டது.  போரில் வெற்றி பெற்று வரும் உயர்த்திய கொடியுடன் யானைகள் புகுமாறு, மலையில் குடைந்தது போல் உயர்ந்து இருந்தது, அரண்மனையின் வாயில்.

முற்றம்

திரு நிலைபெற்ற தீது தீர் சிறப்பின்
தருமணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து   90
நெடுமயிர் எகினத் தூ நிற ஏற்றை
குறுங்கால் அன்னமொடு உகளும் முன்கடை (89-92)

பொருள்:   செல்வம் நிலைபெற்ற அரண்மனை முற்றத்தில், குற்றமற்ற சிறப்புடைய மணல் கொண்டு வந்து பரப்பப்பட்டது.  நீண்ட மயிரையுடைய கவரிமாவின் தூய நிறத்தையுடைய ஆண் ஒன்று குறிய கால்களையுடைய அன்னத்துடன் தாவித் துள்ளி விளையாடியது.

அரண்மனை ஓசைகள்

பணை நிலை முனைஇய பல் உளைப் புரவி
புல் உணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு
நிலவுப் பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து,   95
கிம்புரிப் பகுவாய் அம்பணம் நிறைய
கலிழ்ந்து வீழ் அருவிப் பாடு விறந்து அயல,
ஒலி நெடும் பீலி ஒல்க மெல் இயல்
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை
நளி மலைச் சிலம்பின் சிலம்பும் கோயில் (93-100)

பொருள்:  பந்தியில் நிற்பதை வெறுத்து அடர்ந்த பிடரி மயிரையுடைய குதிரை புல்லாகிய உணவை உண்டு குதட்டும், தனிமை தோற்றுவித்த குரலுடன்.  நிலாவின் பயனை மன்னர் நுகரும்படியாக ஒளியுடைய பெரிய முற்றத்தில் சுறா மீனின் வாயைப் போன்று பகுக்கப்பட்ட நீர்க்குழாயில் நிறைய நீர் கலங்கி அருவியாக மிகுந்த ஒலியுடன் விழுந்தது.  அருகில், தழைத்த நீண்ட தோகை ஒதுங்க மென்மையான தன்மையைக் கொண்ட செருக்கான மயில் கூவுகின்றது.  மயிலின் குரல் வயிர் என்ற இசைக் கருவியின் இனிமையான ஒலியைப் போன்று உள்ளது.  அடர்ந்த மலையின் ஆரவாரம் போல் ஆரவாரித்தது அரண்மனை.

அந்தப்புரத்தின் அமைப்பு

யவனர் இயற்றிய வினை மாண் பாவை
கை ஏந்தும் அகல் நிறைய நெய் சொரிந்து,
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிர் எரி
அறு அறு காலைதோறு அமைவரப் பண்ணிப்
பல் வேறு பள்ளிதொறும் பாய் இருள் நீங்க,   105
பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின் (101-107)

வரை கண்டன்ன தோன்றல, வரை சேர்பு
வில் கிடந்தன்ன கொடிய பல் வயின்,
வெள்ளி அன்ன விளங்கும் சுதை உரீஇ,   110
மணி கண்டன்ன மாத்திரள் திண் காழ்
செம்பு இயன்றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்,
உருவப் பல் பூ ஒருகொடி வளைஇ,
கருவொடு பெயரிய, காண்பு இன் நல் இல் (108-114)

பொருள்:  யவனர்கள் இயற்றிய தொழில் சிறப்புடைய பாவை விளக்குகளின் கையில் ஏந்தப்பட்ட, வியப்புடைய எண்ணெயை ஊற்றும் அகல் நிறைய எண்ணெயை ஊற்றி, பருத்த திரியைக் கொளுத்தி, அதன் நிறத்தையுடைய மேல் பகுதியை நிமிர்த்தி, எண்ணெய் குறையும்பொழுதெல்லாம் எண்ணெயை ஊற்றித் திரியைத் தூண்டி, பல அறைகளிலும் உள்ள பரந்த இருளை நீக்கினார்கள்.  பெருமை பொருந்தியவனும் தலைமை உடையவனுமான பாண்டிய மன்னன் அன்றி வேறு ஆடவர் எவரும் நெருங்க முடியாத அரிய காவலுடைய எல்லையில்,

 

         மலையைக் கண்டது போன்ற உயர்ந்த தோற்றம்.  மலையில் உள்ள வானவில்லைப் போன்று பல இடங்களில் கொடிகள் இருந்தன.  வெள்ளியைப் போன்ற விளங்குகின்ற சாந்தைத் தடவியிருந்தனர்.  நீலமணியைக் கண்டாற்போல் கருமையும் திரட்சியுமுடைய தூண்கள் அங்கு இருந்தன.  செம்பினால் இயற்றியதைப் போல் செய்யப்பட்ட உயர்ந்த சுவர்கள் இருந்தன.  வடிவான பல மலர்களையுடைய ஒப்பற்ற வளைந்த கொடிகளை அச்சுவர்களில் வரைந்திருந்தனர்.  கருவின் பெயர்பெற்ற கருவறை இருந்தது, காண்பதற்கு இனிமையான அந்த நல்ல இல்லத்தில்.

தலைவியின் கட்டில்

தச நான்கு எய்திய பணை மருள் நோன் தாள், 115
இகல்மீக் கூறும் ஏந்து எழில் வரி நுதல்
பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து,
சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன்
கூர் உளிக் குயின்ற ஈர் இலை இடை இடுபு,
தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்பப்   120
புடை திரண்டிருந்த குடத்த இடை திரண்டு
உள்ளி நோன் முதல் பொருத்தி அடி அமைத்து,
பேர் அளவு எய்திய பெரும் பெயர்ப் பாண்டில் (115-123)

பொருள்:  நாற்பது வயதை அடைந்த, முரசைப்போன்று வலிமையான கால்களையும், போரில் புகழடைந்த, உயர்ந்த அழகுடைய, நெற்றியில் வரிகளையுடைய, போரில் வீழ்ந்த யானையின் தானாக விழுந்த தந்தங்களின் பக்கங்களைச் செதுக்கி, சீருடனும் செம்மையாகவும் வல்லவனான தச்சன் கூர்மையான உளியால் செதுக்கிய இரண்டு இலைகளை இடையில் இட்டு, கர்ப்பத்தால் அசைந்து நடக்கும் பெண்களின்  வீங்கிய முலைகளைப் போல் பக்கங்கள் திரண்டு இருந்த குடத்தை உடையவாய்க் கட்டிலுக்கும் குடத்திற்கும் இடையே உள்ள இடம் திரண்டு, பூண்டைப் போன்ற வலிய உறுப்புகளைப் பொருத்திக் கால்களை அமைத்து, பெரியதாகச் செய்த பெரும் புகழையுடைய வட்டக்கட்டில்.

கட்டிலின் ஒப்பனை

மடை மாண் நுண் இழை பொலிய தொடை மாண்டு
முத்துடைச் சாலேகம் நாற்றி குத்துறுத்து,   125
புலிப் பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
தகடு கண் புதையக் கொளீஇத் துகள் தீர்ந்து
ஊட்டுறு பல் மயிர் விரைஇ, வய மான்
வேட்டம் பொறித்து, வியன் கண் கானத்து
முல்லைப் பல் போது உறழப் பூ நிரைத்து, 130
மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
துணை புணர் அன்னத் தூ நிறத் தூவி
இணை அணை மேம்படப் பாய் அணை இட்டு,
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடு அமை தூ மடி விரிந்த சேக்கை (124-135)

பொருள்:   மூட்டுவாய்ச் சிறப்பாகப் பொருந்திய நுண்ணிய நூல் பொலியத் தொடுத்த சிறந்த முத்துக்களையுடைய பலகணிகள் போன்ற தொடர்மாலைகளைக் கட்டிலின் மேல் பகுதியைச் சுற்றித் தொங்கவிட்டு, புலியின் பொறிகளைப் பொறித்த அழகிய நிறத்தையுடைய தட்டம் போன்ற தகடுகளைக் கட்டிலின் கூரையில் இடம் மறையும்படி பொருத்தி, குற்றமற்ற, பல நிறங்கள் ஊட்டப்பட்ட பல மயிர்களை உள்ளே வைத்துப் போர்த்திய போர்வையின் மேல் மானைச் சிங்கம் வேட்டையாடுதல் போன்ற உருவைப் பொறித்து, அகன்ற காட்டில் மலர்ந்த முல்லை மலர்களின் உருவங்களையும் பல வேறுபட்ட மலர்களின் உருவங்களையும் பொறித்து மென்மையாகப் போர்த்திய போர்வைக்கு மேல், துணையுடன் இணைந்த அன்னத்தின் தூய மயிரினையுடைய அணையை மேன்மையுண்டாக விரித்து, அதன் மேல் தலையணைகளை இட்டு, கஞ்சியைக் கொண்ட துவைத்த துணியில், மலர் இதழ்களுடன் விரித்த தூய படுக்கை.

தலைவியின் நிலை

ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்துப்
பின் அமை நெடு வீழ் தாழத் துணை துறந்து
நல் நுதல் உலறிய சில் மெல் ஓதி,
நெடு நீர் வார் குழை களைந்தென குறுங்கண்
வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின்,   140
பொலந்தொடி தின்ற மயிர் வார் முன் கை
வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து, 
வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்
செவ்விரல் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்
பூந்துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல்   145
அம்மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு
புனையா ஓவியம் கடுப்ப (136-147)

பொருள்:  முத்து மாலையைத் தாங்கிய பெரிய முலைகளையுடைய மார்பின் மேல்  இப்பொழுது ஒரு தாலி (சங்கிலி) மட்டுமே தொங்கியது..  கணவனிடமிருந்து பிரிந்ததால் அவளுடைய அழகிய நெற்றி ஒளியை இழந்தது. நெற்றியில் உலர்ந்த மென்மையான கூந்தல் படர்ந்திருந்தது. மிகுதியான ஒளியையுடைய நீண்ட காதணிகளை நீக்கித் தாளுருவி என்ற காதணிகளை அணிந்திருந்தாள், சிறிது தொங்கும் காதுகளில்.  பொன் வளையல்கள் தழும்பு உண்டாக்கிய மயிரையுடைய முன் கையில் வலம்புரிச் சங்கினால் செய்த வளையல்களுடன் காப்பு நூலைக் கட்டியிருந்தாள்.  வாளை மீனின் பகுத்த வாயைப் போலத் தோன்றும் வளைந்த சிவப்பு நிறமுடைய மோதிரத்தைச் செவ்விரலில் அணிந்திருந்தாள்.  மென்மையான ஆடையை முன்பு இடுப்பில் அணிந்த அவள் இப்பொழுது அழகிய  மாசு உடைய ஒளியுடைய நூல் ஆடையுடன் புனையாத ஓவியத்தைப் போன்று இருந்தாள்.

தலைவியின் அடியை வருடி, தேற்றும் செவிலியர்

……………………………………….புனைவு இல்

தளிர் ஏர் மேனித் தாய சுணங்கின்,
அம்பணைத் தடைஇய மென் தோள் முகிழ் முலை
வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின்,   150
மெல் இயல் மகளிர் நல் அடி வருட (147-151)

நரை விராவுற்ற நறு மென் கூந்தல்
செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇ,
குறியவும் நெடியவும் உரை பல பயிற்றி,
இன்னே வருகுவர் இன் துணையோர் என   155
உகத்தவை மொழியவும் (152-156)

 

பொருள்:  ஒப்பனை இல்லாத தளிர் போன்ற மேனியையும், பரந்த தேமலையும், அழகிய  மூங்கிலைப் போன்ற திரண்ட மென்மையான தோளினையும், கச்சையினால் இறுக்கமாகக் கட்டிய தாமரை மொட்டினைப் போன்ற முலைகளையும், வளைந்த அசையும் இடையையுமுடைய மென்மையான பெண்கள், அரசியின் நல்ல அடியைத் தடவ,

        நரை மயிர் கலந்த நறுமணமுடைய மென்மையான கூந்தலை உடைய சிவந்த முகத்தையுடைய செவிலிகள், அரசியின் ஆற்றாமை ஒழுக்கம் மிகுந்ததால் கூடி, குறைவாகவும் மிகுதியாகவும் சொற்களைப் பல முறை கூறி, விரைவில் வருவார் உன்னுடைய இனிய கணவர் என மனதுக்கு இனியவற்றைக் கூறவும்,

தேறாத் தலைவி

…………………..ஒல்லாள், மிகக் கலுழ்ந்து,
நுண் சேறு வழித்த நோன் நிலைத் திரள் கால்
ஊறா வறு முலை கொளீஇய கால் திருத்திப்
புதுவது இயன்ற மெழுகு செய் படமிசைத்
திண் நிலை மருப்பின் ஆடு தலையாக,  160
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து
முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி, நெடிது உயிரா,
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரிப்பனி
செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சில தெறியாப்   165
புலம்பொடு வதியும் (156-166)

பொருள்:   அவள் ஆறுதல் அடையவில்லை.  மிகவும் அழுதாள்.  அவள் அமர்ந்திருந்த கட்டிலில் நுண்ணிய சாதிலிங்கம் தடவப்பட்டு அதன் வலிமையான திரண்ட கால்களில் குடத்தைப் போன்ற பகுதிகள் பொருத்தப்பட்டிருந்தன. புதிதாக இயற்றிய, மெழுகு தேய்த்த மேல் பகுதியில் வலிமையான கொம்புடன் மேட ராசி (ஆடு) முதலாக விண்ணில் திங்கள் ஊர்ந்து திரியும் ஓவியம் இருந்தது.  கதிரவனிடமிருந்து மாறுபாடு மிகுந்த சிறப்புடைய நிலவோடு நிலையாக நின்ற உரோகிணியை நினைத்து, உரோகிணியைப் போல் பிரிவின்றித் தான் இல்லையே என்று வருந்தினாள்.  பெருமூச்சு விட்டாள். பெரிய (சிறந்த) இமைகள் கொண்ட அவளுடைய கண்களிலிருந்து மிகுந்த மென்மையான கண்ணீர்த் துளிகள் விழுந்தன.  தன்னுடைய சிவந்த விரல்களைக் கடைக் கண்ணிடத்தில் சேர்த்து கண்ணீர்த் துளிகளைத் தெறித்தாள்.  தனிமையில் வசிக்கும்,

 

கொற்றவையை வேண்டல்

…….. நலங்கிளர் அரிவைக்கு
இன்னா அரும்படர் தீர, விறல் தந்து,
இன்னே முடிக தில் அம்ம  (166-168)

பொருள்:  அன்பு மிக்க இளம் பெண்ணிற்கு, தீமையாக இருக்கின்ற பெரும் வேதனை தீர, மன்னன் வெற்றி அடைந்து உடனே வர வேண்டும்.  இது எங்கள் விருப்பம்.  எங்கள் வேண்டுகோளைக் கேட்டு அருளுவாயாக கொற்றவையே, என வேண்டினர் செவிலியர்.

 

பாசறையில் அரசன் நிலை

………………………..மின் அவிர்
ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை
நீள் திரள் தடக்கை நில மிசைப் புரள, 170
களிறு களம் படுத்த பெருஞ்செய் ஆடவர்
ஒளிறு வாள் விழுப்புண் காணிய, புறம் போந்து,
வடந்தைத் தண் வளி எறிதொறும் நுடங்கித்
தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல
பாண்டில் விளக்கில் பரூஉச்சுடர் அழல, 175
வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு
முன்னோன் முறை முறை காட்டப் பின்னர் (168-177)

பொருள்:   ஒளியுடைய முக அணிகலன்களுடன் பொலிந்த, போர்த்தொழிலைக் கற்ற யானைகளின் நீண்ட திரண்ட பெரிய தும்பிக்கைகள் நிலத்தின் மேல் விழும்படி ஆண் யானைகளைக் கொன்று, பெரிய மறச்செயலை செய்த மறவர்களின் ஒளியுடைய வாளினால் ஏற்பட்ட புண்களைக் காணும் பொருட்டு, தன் பாசறை இருக்கையிலிருந்து வெளியே வந்தான் மன்னன்.  குளிர்ந்த வாடைக் காற்று வீசும்பொழுதெல்லாம் அசைந்து தெற்கில் உயர்ந்து சாய்ந்து பருத்த சுடருடன் எரியும் நல்ல பல அகல் விளக்குகள் எரிந்தன.  வேப்ப இலைகளை மேலே கட்டிய வலிமையான காம்பையுடைய வேலொடு மன்னனுக்கு முன் நடக்கும் படைத் தலைவன், புண்பட்ட மறவர்களை முறை முறையாக மன்னனிடம் காட்டினான்.  அதன் பின்,

 

மணி புறத்து இட்ட மாத்தாள் பிடியொடு
பருமம் களையாப் பாய் பரிக் கலி மா
இருஞ்சேற்றுத் தெருவின் எறி துளி விதிர்ப்ப,   180
புடை வீழ் அம் துகில் இடவயின் தழீஇ
வாள் தோள் கோத்த வன் கண் காளை
சுவல் மிசை அமைத்த கையன், முகன் அமர்ந்து,
நூல் கால் யாத்த மாலை வெண் குடை
தவ்வென்று அசைஇ தா துளி மறைப்ப,   185
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்,
சிலரொடு திரிதரும் வேந்தன்,
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே, (177-188)

பொருள்:   மணிகளைத் தம் முதுகில் இட்ட, பெரிய அடிப்பகுதியையுடை கடிவாளத்துடன் பக்கரையும் களையப்படாத பாய்ந்து ஓடும் செருக்கான குதிரைகள், கரிய சேற்றினையுடைய தெருவில், தங்கள் மேல் விழும் நீர்த்துளிகளை உடலைச் சிலிர்த்துச் சிதறின.  தோளிலிருந்து வழுக்கி விழுந்த அழகிய ஆடையை இடதுபுறமாகத் தழுவி, வாளைத் தோளில் தொங்கவிட்ட வலிமையான இளைஞனின் தோள் மேல் கையை வைத்திருந்தான் மன்னன்.  தன்னுடைய மறவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுமாறு முகம் பொருந்தி இருந்தான் அவன்.  நூலால் தொடுத்த முத்துச் சரங்களையுடைய மன்னனின் குடை ஒலியுடன் அசைந்து மழைத் துளிகளை அவன் மேல் விழாதவாறு மறைத்தது.  மிகுந்த இருட்டான நடு இரவிலும் அவன் தூங்கவில்லை.  சில மறவர்களுடன் திரிகின்றான், பலரோடு மாறுபட்டுப் போர்த்தொழில் செய்யும் பாண்டிய மன்னன்.

 

---------

  

Comments

Popular posts from this blog

வில்லிபாரதம் : மற்போர் சருக்கம் _ வில்லிபுத்தூரர்

கம்பராமாயணம்

தமிழ்விடு தூது